Tuesday, November 30, 2004

மேல்Kind சர்வே 1 - பாகம் இரண்டு

பாகம் இரண்டு

கேட்கப்பட்ட கேள்வி:
1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?

கவித்துவமான ஒரு நிகழ்வைப் பற்றிய இந்தக் கேள்வி, சிறப்பான பதில்களைப் பெற்றுத் தரும் என்று நம்பினோம். அதன்படியே சிறந்த பதில்கள் கிடைத்தன. அவை இங்கே:

-o0o-

அருண் வைத்யநாதன்

கோவில் குளத்தில் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளிப்பதற்காக, அவள் மெதுவாய் படிக்கட்டுகளில் மெல்லிய பாதங்களை அடி மேல் அடியாய் வைக்க..நான் செய்த புண்ணியங்கள் அங்கு பாசியாய் குவிந்து இருந்ததை, அவளது பக்திக்கண்கள் பார்க்கத் தவறி, காலை அதன் மேல் வைக்க, குடம் வானில் குட்டிக் கரணம் (ஸ்லோமோஷனில்) அடித்த அந்த அரை நொடியில், அவளை எனது கைகள் தாங்கிப் பிடித்தது. அவளது ஐடெக்ஸ் கண்கள் துடிதுடிக்க, எனது அரும்பு மீசைகளுக்கு அடியில் இருந்த உதடு சினேகமாய் சிரித்து வைக்க...தம்தன தம்தன ஆஹாஹா...ஆஹாஹா..தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன! இந்தக் கோடாலி கண்கள், எனது பிஞ்சு நெஞ்சு மரத்தை வெட்டி சாய்த்ததை.. அறியாமலேயே அவள் பார்வையை வேகமாய் வீசிக் கொண்டிருந்தாள் என்ற (எல்லாக் கவிஞர்களுக்கும் சுலபமாய் தோன்றக்கூடிய) வசன கவிதையை, விடுவிடுவென எடுத்து விட மறந்தாலும், டி.எம்.எஸ் டிஜிட்டல் இசையில் மெல்லியதாக, ஆனால் அதே சமயம் கணீரென்று 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்...' என்று பாடுவதை அவள் கேட்டிருப்பாளா என்று மனசு சின்னக்கவுண்டர் பம்பரமாய் சுற்றியது.

மேலே சொன்னது போலெல்லாம்... ஒரு சந்திப்பும் அதைச்சுற்றிய நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்போ நேரமோ இல்லாததால் தான், அன்று 'நினைவோ ஒரு பறவை' என்று கமல்ஹாசனில் ஆரம்பித்து, 'என்னாசை மைதிலியே' என்று ரீமிக்சுக்கு சிம்பு ஆடுவது வரை, பார்ப்பதற்கு சுவையாய் இருக்கிறதோ என்னவோ?! நான் என்னுடைய மனைவியை, 'இவதாண்டா என் பொண்டாட்டி' என்று டாக்டர் ராஜசேகர்தனமாய் சொல்வதற்கு முன்னால் பார்த்தது, நான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்தில். அவள் வேலைக்கான நேர்முகத் தேர்வில் தேர்வாகி, உள்ளே இன்னும் சில வெற்றி பெற்ற புதுசுகளோடு உட்கார்ந்திருந்தாள். அப்போது அமெரிக்கா வருவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாய் ஈடுபட்டிருந்ததால், அலுவலகத்துக்கு நான் வருவதென்பது, ஆடிக்கொரு தடவை நடக்கும், அடிக்கடி நடக்காமலிருக்கும் சம்பவம். அப்போது என்னோடு பணிபுரிந்த நண்பனொருவன்,"டேய், நம்ம டீமுக்கு புதுசா நாலஞ்சு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க..போய்ப் பாரு!" என்று கண்ணடித்தான். வெட்டியாய் திரிந்து கொண்டிருந்த எனக்கு, இது போன்ற வாய்ப்புகளெல்லாம் கிடைத்ததென்றால் விட்டு விட மனசே வராத ரம்மியமானதொரு காலம். பட்டீரென கதவைத் திறந்து கொண்டு, தலையை நுழைத்து...ஒரு நோட்டம் விட்ட எனது கண்கள், இவள் மேல் மட்டும் இரண்டாவது முறை வேண்டுமென்றே தானாக ஸ்கேன் செய்தது. அப்போது எனது மனதில் தோன்றிய நிஜமான எண்ணம் என்னவென்றால், "அட...இந்தப் பொண்ணு நல்லாயிருக்கே!"


(தலைவா, 'என் ஆசை மைதிலியே' ரீமிக்ஸில சிம்பு ஆடுறது தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சதா? எங்களோட 'அவங்க' கஷ்டப்பட்டு ஆடினது தெரியலையா? என்ன ரசனையோ உங்களுக்கு போங்க!!)

-o0o-

தேசிகன்

பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி...

நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம்
சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் பார்க்க சென்று இருந்தேன்.

"எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்து கேட்டு விடு"

சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க் வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லேரும் என்னை எட்டி பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய் குட்டி என்னை பார்த்து செல்லமாக வாலையாட்டியது!

பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லேரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னை கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்த கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.

அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணை பிடித்திருக்கா?"
"எது பாட்டி பொண்ணு?"
"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"

அதற்க்குள் என் அம்மா என்னை பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். (அடுத்த முறை மணிமேகலை பிரசுரத்திடம் "பெண் பார்க்கும் போது கேட்கும் கேள்விகள்" புத்தகம் இருக்கா என்று கேட்க வேண்டும்)

சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
"எங்கு பி.காம் படிச்ச?"

கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாக பதில் சொல்ல...

எனக்கு அந்த பெண்ணை... நீங்களே முடிவு செய்யுங்களேன்!


-o0o-

என். சொக்கன்

நான் என் மனைவி உமாவை முதன்முதலாகப் பார்த்தபோது, எங்கள் இருவருக்குமே வயது பத்துக்குக் குறைவுதான்.

அந்த வயதில், இவர்தான் மனைவியாக வரப்போகிறவர் என்றோ, அதுபற்றிய கற்பனைகள்/பயங்க(?)ளோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், எங்கள் இருவருக்கும் திருமணப் பேச்சு தொடங்கியபின், அவரைச் சந்தித்தது பற்றி யோசித்துப் பார்க்கிறேன்.

அப்போது நான் ஹைதராபாதில். உமா திருச்சி அருகே ஆங்கரை என்ற கிராமத்தில். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தபோது, இந்த விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டார்கள்.

நான் உடனடியாக சம்மதித்துவிடவில்லை. அதற்கான காரணங்களை இங்கே விவரித்தால், ராத்திரிச் சாப்பாடு நிச்சயமில்லை என்பதால், சில நாள் பிடிவாதத்துக்குப்பின், அரைகுறையாக சம்மதித்தேன் என்றுமட்டும் சொல்லிவைக்கிறேன். அதில் ஒரு முக்கியமான நிபந்தனை, 'உமாவை நேரில் பார்த்துக் கொஞ்சம் பேசவேண்டும், அதன்பிறகுதான் முழுமையான சம்மதத்தைச் சொல்வேன்', என்று.

அதற்காக, நானும், என் அத்தையும், திருச்சிக்குச் சென்றோம். உமா வீட்டிற்குச் சென்று, விபரம் சொல்லி, மாடியிலிருந்த ஒரு தனியறையில் சந்தித்தோம். சுவரில் ஒரு ஓரமாக ரஜினிகாந்த் படம், பக்கத்திலேயே சுவாமி ராகவேந்திரர். சற்றுத் தொலைவில், 'முயற்சிகள் தவறலாம், முயற்சி செய்யத் தவறக்கூடாது', என்றெழுதி, அதைச் சுற்றிலும் ஒரு வண்ணக் கோலம். பக்கத்தில் ஒரு சிறு கதவு திறந்திருக்க, மிச்சமிருந்த மொட்டை மாடியில், கரையான் சகிதம் நிறைய தென்னங்கீற்றுகள்.

சில நிமிடங்களுக்கு அவற்றையே தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம், கூச்சமோ, வெட்கமோ இல்லை. ராத்திரி முழுக்க கஷ்டப்பட்டு யோசித்து, பேச நினைத்ததெல்லாம் மறந்துபோச்சு.

முதலில் பேசியது நானா, அவரா என்று நினைவில்லை. ஆனால், நான் கேட்டது ஒரே ஒரு கேள்விதான், 'இந்தக் கல்யாணத்தில உனக்கு முழுச் சம்மதமா ? இல்லை, அப்பா-அம்மா சொன்னதுக்குத் தலையாட்டிட்டியா?'

'சம்மதம்தான்', என்று உமா சொன்னபோது, அதில் பொய் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே, 'எனக்கும் முழுச் சம்மதம்', என்று அங்கேயே சொல்லிவிட்டேன்.

அதற்குமேல் பேசுவதற்குள், கீழேயிருந்து, 'சாப்பிட வாங்க', என்று குரல் வந்துவிட்டது. கல்யாணச் சாப்பாடு.


-o0o-

ரவியா

கல்யாணம் காட்சி என்று யோசிக்காத வயதில் தான் என்னவளை பார்த்தேன். அதெல்லாம் "துள்ளித்திரிந்த காலம்" (அ) "துள்ளுவதோ இளமை காலம்" என்று செல்வராகவன் போன்றவர்கள் சொல்லித்தான் தெரியுது. அப்பொழுது என்னவோ ஸ்கூல், டியுஷன், விளையாட்டு என்று நேரம் போவதே தெரியாத காலம். பாண்டியில் நாங்கள் குடியிருக்காத தெருவே கிடையாது என்று சொல்லுமளவிற்கு அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டிருப்போம். அப்படித் தான் என் பதினாலாவது வயதில் அவள் குடியிருந்த தெருவில் அவள் வீட்டிற்கு எதிர் வீடு பக்கத்தில் தஞ்சமடைந்தோம்.

உடனே சினிமா ஸ்டைலில் சைட், காதல் என்று கற்பனை பண்ணிக்காதீங்க. பதினாலு வயசுல உங்களுக்கே உங்களை புடிச்சுதா? அதேமாதிரிதான். அரும்பு மீசை. கால்கள் சருமம் தெரிய அரை கால் சட்டை (அப்பவெல்லம் shorts என்று சொல்ல மாட்டாங்க. விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இதே கோலம்தான்.) பெண்களைப் பார்த்தாலே ஒரு வெட்கம். அதிலும் எதிர் வீட்டிலும் அதன் அடுத்த வீட்டிலும் குறும்புடன் புதிதாய் வந்தவனை ‘எடை போடும்’ பெண்கள்.. கேட்கவேண்டுமா? சைக்கிளில் வந்திறங்கி அதை குறட்டில் (ஆலோடி) ஏற்றிவிட்டு வீட்டுக்குள் செல்வதிற்குள் "க்ள்க்.. க்ள்க்" என்று சிரிப்புடன் 3 ஜோடி கண்கள் நோட்டமிடும். (என் மூக்கைப் பார்த்து தான் சிரித்ததாக பிறகு தெரிந்துக்கொண்டேன். நம்ம சுந்தர் மட்டும் மூக்கை நுழைக்காமலிருந்தால் அதேயே என் புனைப் பெயராய் தேர்ந்தெடுத்திருப்பேன்.)

சில நாட்களில் என் அக்காவும் அவளின் அக்காவும் நண்பிகளாகி வீட்டுக்கு வரப் போக ஒரு நாள் அதிகார பூர்வமான அறிமுகம் நடந்தது. அப்போது தான் நேரில் அருகில் பார்த்தேன். முகத்தில் ஒரு பயம் கலந்த வெட்கம். தோழியர்களுடன் சேர்ந்து இவ்வளவு நாட்கள் என்னை வெறுப்பேற்றியதை எங்கே அவள் அக்காவிடம் சொல்லிவிடப் போகிறேனோ என்றொரு அச்சம். இந்த கோழி முட்டை கண்ணா (இப்பத்திய ஜோ மாதிரி - பழைய ஜெயசுதா மாதிரி) இப்படி என்னை வாட்டியது என்று எனக்கு ஒரே கோபம் கலந்த ஆச்சரியம்.

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- அக்கினி நட்சத்திர பிரபு-கார்த்திக் ஸ்டைலில்.

(அப்புறம் பழி வாங்கும் படலங்கள், மோதல்களெல்லாம் இன்னொரு நாள்).

சில வருடங்களில் மறுபடியும் வீடு மாற்றல். அதே ஊரில்தான். எதிர் வீட்டுப் பையனை பார்க்கப் போகும் சாக்கில் சண்டைகள் தொடர்ந்தது. (அவள் காலேஜுக்கு போகும்போது பின் தொடர்ந்து துணைப் போகும் ரோமியோக்களைப் பற்றிக் கூறி சீண்டுவேன்)

பிறகு வெளி நாட்டிலிருக்கும் அவளின் அக்கா அவளை அவரிடம் அழைத்துக் கொண்டார். மூன்று வருடம் கழிந்தது. நானும் அதே நாட்டிற்கு செல்லும் நாள் வந்தது. *மரியாதை நிமித்தம்* அவளின் அம்மாவிடம் விடைபெறச் சென்றேன். சில சிறிய பொருள்களை அவரின் மகளுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்று கேட்டார். சரியென்றேன். நிச்சயம் விலாசம் கிடைக்குமே. இப்போது நினைத்துப் பார்க்கையில் உண்மையிலேயே *மரியாதை நிமித்தம் தான்* அவரைப் பார்க்க சென்றேனா என்று சரியாகத் தெரியவில்லை. :))

கைவசம் தொலைபேசி எண் இல்லை. டைரெக்டரியில் தேடவும் தோன்றவில்லை, முன் அறிவிப்பில்லாமல் ஒருவர் வீட்டிற்கு நேரில் செல்வது (ஐரோப்பில்) மரியாதையில்லை என்றும் தெரியாது. ஒரு நாள் ஞயிற்றுக் கிழமை நேரில் சென்று காலிங் பெல்லினேன். கதவை திறந்த அவளின் சகோதரிக்கு ஒரே திகைப்பு. பொடியனாக பார்த்திருந்த என்னை இப்போழுது அடையாளம் தெரியவில்லை. நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்குள் கதவின் வழியே ஒரு ஜோடி கண்கள் ஆச்சரியமாக விரிந்தது.

"நம்ம ரவிதான்" என்று ஒரு குரல். அந்த "நம்ம" எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உள்ளே சென்றவுடன் ஒரே அதிர்ச்சி. "பொம்பள தனுஷா" இருந்தவள் ஒல்லிப்பிச்சான் "ஜோதிகா" வாக மாறியிருந்தாள். கோழிமுட்டை கண்கள் முகம் பெருத்திருந்ததால் சிறுத்திருந்தது. பாரம்பரிய வழக்கமான அறிமுகத்திற்குப் பின் பேசிக்கொண்டிருக்கையில் கண்களில் ஒரு கம்ப்லிசிட்டி (complicity) தெரிந்தது. வீட்டில் ஸீரியசாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருப்பதாக அவளின் சகோதரி சொல்லும் போது முகத்தில் ஒரு வெட்கம். நாள் முழுதும் தனியே பேச சந்தர்ப்பம் கிடைக்காவிடினும் கண்களாலும் பல விஷயங்கள் புரிய வைத்தாள்.

அந் நாட்டைப் பொருத்தவரை என்னைவிட சீனியர் என்ற ஒரு பெருமை, அக் காரணத்தினாலேயே அந்நாட்டு சம்பரதாயங்கள் கடைப்பிடிப்பதில் (போஜன மேசை விதிகள்) எதாவது தவறு செய்து விடுவேனோ என்ற பயம் கலந்த அனுசரணை. நண்பனை காப்பாற்ற கண்களாலேயே எச்சரிக்கை. சிறு வயதில் பார்த்த அசட்டு நண்பன் மேல்படிப்பிற்காக வெளி நாட்டிற்கு வந்திருப்பதில் ஒரு பெருமை. ஒன்றும் பேசாமலேயே!

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- ஆட்டோகிராப் சேரன்-ஸ்னேகா ஸ்டைலில்.

அவளின் அக்கா - மாமாவிற்கு என்னை மிகவும் பிடித்துப் போயிற்று. என்னை யாருக்கு தான் பிடிக்காது? (இப்பொழுது கேட்டால் "சரியான காக்கா" என்பாள்) என்னை குடும்ப நண்பனாக பாவித்து அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் அழைப்பார்கள். (ஒரு வேளை போட்டோ பிடிக்க ஆள் தேவைப்பட்டதால் இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.) அச்சந்தர்பங்களில் கல்யாண வயதை எட்டிப்பார்க்கும் பெண்களின் பெற்றோர்கள் என்னைப் பற்றி "விசாரித்ததாக" பிறகு என்னிடம் சொல்லும் போது கண்களில் தெரிந்தது பெருமை கலந்த பொறமையா? . இப்படியாக 2 வருடம் கழிந்தது. இடையில் இந்தியா சென்றபோது கல்யாண தரகர் வேலை வேறு.

கட்டாய ராணுவச் சேவைக்காக ஒரு வருடம் ராணுவத்தில் இருந்த பொழுது தான் கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. சில நாட்களில் குடும்ப காரணங்களுக்காக ஐரோப்பாவில் வேறோரு நாட்டில் அவளும் தங்க நேர்ந்தது. அந்த Autumn-ல் தான் எங்கள் நட்பு ஆட்டம் கண்டது. ஐரோப்பாவில் கோடைக் காலம் முடிந்து Autumn வரும் போது சிலர் மன உளைச்சல்களுக்கு ஆளாவது உண்டு. தனிமையில் இருந்த இருவருக்கும் இந்த முன் குளிர்காலத்தில் எங்கள் கடிதங்களே ஒரே ஆறுதல். ஒருவருக்கொருவர் கடிதங்களிலேயே ஆறுதல் சொல்லப் போய் அவைகளின் சாரமே மாறிவிட்டது. எப்படி? எப்போது? என்றுதான் தெரியவில்லை. ஆனால் எங்கள் 'நட்பு' இறந்துவிட்டது என்று இருவருக்குமே தெரிந்திருந்தும் 'எந்தக் கட்டத்தை' அடைந்துள்ளது என்று எங்களுக்கே தெரியவில்லை.

டிசம்பர் லீவில் சந்திப்பதாக முடிவு. அந்த 'நன்னாளும்' வந்தது (The ‘D’ Day). நான் சென்ற நேரம் வீட்டில் யாருமில்லை. கதவை திறந்தவளை எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவள் என் பால்ய தோழியே இல்லை. அந்த கண்களில் தெரிந்தது வெட்கமா? பயமா? மகிழ்ச்சியா? ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவருக்கும் நட்பை தாண்டி எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறோம் என்று புரிந்தது.

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- கமல் பட ஸ்டைலில். :grin:

பி;கு : இப்போழுது என் (எங்களின்) பழைய கடிதங்களைப் படித்துவிட்டு "நாம் தோழர்களாகவே இருந்திருக்கலாம்" என்று அவள் சொல்லும் போது என் நமட்டு சிரிப்பே பதில்... நான், என்னை சீண்டுவதற்காகத் தான் இப்படிச் சொல்லுகிறாள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


-o0o-

சர்வே முடிவு

சர்வேன்னு ஒண்ணு நடத்தினா அதுக்கு முடிவுன்னு ஒண்ணு சொல்லணும்-னு ஒரு எழுதப்படாத விதி இருக்குங்க.

எட்டு பேர் எங்களுக்கு பதில் அனுப்பினாங்க. படிச்சுப் பார்க்கும் போது ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்திருக்காங்க. வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அனுபவங்கள். ஆனா அந்த பில்டப்பையெல்லாம் நீக்கிட்டு உள்ள பார்த்தா.. ஏதோ இருக்குங்க. "இந்தப் பொண்ணு தான் நமக்கு"-ன்னு உள்ள ஒரு பல்பு எரியுதுன்னு தெரியுதுங்க.

அதனால சர்வே முடிவாக என்ன சொல்றோம்னா, அந்த பல்பை நீங்க நோட்டம் விட்டுக்கிட்டே இருங்க. யாரைப் பார்க்கும் போது பல்பு எரியுதோ, அவங்க தான் உங்களோட 'அவங்க.' அந்த பல்பு எரிஞ்சா தான் ஒளிமயமான வாழ்க்கை. புரியுதுங்களா?

அடுத்த சர்வேயில இதே மாதிரி சுவாரஸ்யமான கேள்வி மற்றும் அதை விட சுவையான பதில்களோட சந்திப்போம். அது வரைக்கும் ஜூட் விட்டுக்குறோம்ங்க.