Friday, April 29, 2005

கதை, திரைக்கதை, வசனம்
-இறைவன்

  • எங்கள் பணியகத்து க்ராஃபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்றால் யாராலாவது நம்ப முடியுமா?
  • யாஹுவிலிருந்து ரெடிஃப் மெய்லுக்கு கடிதம் வந்து சேர ஏன் தாமதம் ஆகிறது?


* * * * ** * * * ** * * * ** * * * *

"இதான் என்னோட கணிப்பொறி." என்ற வரிதான் நான் அந்தப்பெண்ணுடன் முதல் முதலாகப் பேசிய வரி.

பெண்பார்க்கப்போனப்போ கூட 'தனியா பேசிட்டு வாங்க' என்றதும் 'என்ன, எல்லாரும் நிறைய சீரியல் பாப்பேளாக்கும்?' என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.

ஆனால் திங்கட்கிழமை மறுபடியும் வீட்டிற்கு குடும்ப சகிதமாக எல்லோரும் வந்திருந்தனர். பிறகு நான், அந்தப்பெண், மற்றும் என் கம்ப்யூட்டர் மட்டும் ஒரு தனி அறையில். அப்போதான் 'இதுதான் என்னோட கணிப்பொறி.'

"பொன்னியின்செல்வன் படிச்சாச்சா?"

"கேள்விப்பட்டு இருக்கேன்."

அப்போ படிச்சதில்லை! ஆஹா! போச், போச்!

"அப்போ வேற எந்த கத புக்கும் கூட படிச்சதே இல்லையா?" என்று ஆவலுடன் கேட்டேன்.


"ம்ஹூம். டி.வி.தான் பார்ப்பேன். நிறைய சீரியல்ஸ் பாப்பேன்."

வந்தியத்தேவன் புடிக்குமா, சேந்தன் அமுதன் புடிக்குமான்னு தெனமும் பேசிப்பேசி சந்தோஷப்படலாம்னு நெனச்சேன். அருள்மொழிவர்மன் யானையோட காதுல என்னமோ சொல்லி யானை வேகமா போனது, அந்தக்காலத்துலயே கல்கிக்கு ரஜினி பத்தி ஐடியா இருந்துருக்குன்னு சொல்லலாம்னு நெனச்சேன். ஆழ்வார்க்கடியான் என்ன ஒரு புத்திசாலி! வந்தியத்தேவன் ரவிதாசன் என்கௌண்டர் நெனச்சு நெனச்சு பார்த்து என்ஜாய் பண்ணலாம். "நீங்கள் இந்த வாளைப்பற்றி கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது" டயலாக் என்ன ஒரு டயலாக்! அப்பறம் வந்தியத்தேவன் போன எடத்துக்கெல்லாம் போய்ட்டு வரலாம் நாமளும். பூங்குழலி புடிச்சா கோடியக்கரைப்பக்கமா போகலாம். குந்தவை புடிச்சா பழையாறைக்கும் போய்ட்டு வரலாம். ரெண்டும் புடிச்சிருந்தா பெரியகோயில்ல போய் கல்வெட்டு படிக்க் கத்துக்கலாம். "கொடுத்தார் கொடுத்தனவும்" கல்வெட்டு எங்க இருக்குன்னு பார்கலாம்.

சரி வுடு. ஜெயமோகன், சுந்தரராமசாமி என்று எல்லாம் என்னைப்போலவே இந்தப்பெண்ணுக்கும் ஒன்றும் புரியாது.

"நமக்கு கல்யாணம் ஓக்கே ஆனாலும் எப்படியும் நிறைய நாள் இருக்கு இல்லையா? கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிங்க, ப்ளீஸ். நானே வாங்கித் தரட்டுமா?" என்றேன்.

"ம். சரி. புக் வாங்கி அனுப்புங்க. உள்ள உங்க ஃபுல்சைஸ் ஃபோட்டோ ஒன்னு வெச்சு..."

புத்தகவாசமே கிடையாதாம். மிச்ச விஷயத்துக்கெல்லாம் போகலாம்.

"என்கிட்ட நீங்க எதாவது கேக்கணுமா? நானே ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கேன்." என்றேன்.

"ம்ம். கல்யாணம் ஆனப்பறம் காலேஜ்க்கு எதுல போறது?"

"ட்ரெய்ன் இருக்கே..."

"ம்ஹூம். நீங்க கொண்டு விட முடியுமா, ப்ளீஸ்."

"சரி, எத்தனை மணிக்கு காத்தால?"

"ஒரு 7:30, 7:45க்கு களம்பினா போதும்."

"ஆ, அப்போ கொறைஞ்சது 7:00 மணிக்காவது எழுந்துக்கணுமா! எனக்கு 7:00 மணி எல்லாம் நடுராத்தி மாதிரி.... "

"கொஞ்ச நாளைக்கு மட்டும். அப்பறம் பழகினப்பறம் நானே போய்க்கறேன்."

ததாஸ்து!

"கம்ப்யூட்டர்ல தமிழ்ல எல்லாம் எழுதி பழக்கம் இருக்கா?" என்று ஆரம்பித்தேன்.

"ம்ஹூம். காலேஜ்ல ப்ராஜக்ட்க்கு மெட்டீரியல் கலெக்ட் பண்ணனும்னா என் ஃப்ரெண்ட் கூட போவேன். என் ஃப்ரெண்ட் தான் எடுத்துத் தருவா."

"ஓ, அப்போ அதிகமா ப்ரௌசிங்க் செண்டரே போறதில்லையா? சரி, ஈ-மெய்ல் ஐ.டி. என்னது?"

"இல்லை."

"ம்ம்ம், என்னது? ஈ-மெய்ல் அக்கௌண்ட்டே இல்லையா?"

"ம்ம்ஹூம். ஆமாம், ஈ-மெய்ல் எப்படி அனுப்பறது? எனக்கு அப்பறமா ஒரு அக்கௌண்ட் க்ரியேட் பண்ணித் தர முடியுமா?"

(க்ருபா, பொங்கி எழு! நல்லவேளை உனக்குத் தெரியாதது எதுவும் கேக்கலை.)

உடனடியாக யாஹூ ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்துக்குச் சென்றேன். படிவம் பூர்த்தி செய்யும் முன்னரே ஜாவாஸ்க்ரிப்ட் எரர். இந்த எரரை பலமுறை பார்த்து இருக்கிறேன். y_width ஆட்ரிப்யூட் undefined என்று திட்டும். ஃபயர்ஃபாக்சில் பிழைச்செய்தி காட்டாது. Refresh பண்ணி, டிஸ்கனெக்ட் பண்ணி, மீண்டும் அதே பக்கம் போய்... ம்ஹூம். ஒன்றும் கதைக்கே ஆகவில்லை. கிட்டத்திட்ட இருபதும் நிமிடங்கள் யாஹூவுக்கே போச்!

சரி போ. rediffmailக்குப் போய்ப்பார்ப்போம்.

ஒரு மாதிரி குத்துமதிப்பாக யூசர்நேம் பற்றி விளக்கினேன்.

"யூசர்நேம் உங்க பேர்லயே கிடைக்கறது ரொம்ப கஷ்டம். வேற எதாவது பேர்லதான் வரும்."

"என் பேரையே மொதல்ல போட்டுதான் பாப்போமே."

"சரி, பாஸ்வேர்ட்...?"

"ஷங்கர்."

எனக்குப் முதலில் அதன் பொருள் புரியவில்லை. பிறகுதான் சுதாரித்துகொண்டதும் சிரிப்பு வந்தது.

"ம்ம், நான் க்ருபாதான் பொதுவா. ஷங்கர்ன்னு அவ்வளவா யாரும் கூப்படறதில்லை. பரவாயில்லை, அதுவே இருக்கட்டும்."

சப்மிட் பண்ணியதும் "இந்தப் பேர்ல யூசர்நேம் கிடையாது" என்று நான் சொன்னதையே (எவ்வளவு தீர்க்கதரிசனம்!!!) யாஹூவும் சொன்னது.

"சரி, உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை உங்க பேர் பின்னாடியே சேர்த்துக்கலாம். உங்க அப்பா பேர், அம்மா பேர்....இல்லாட்டி புருஷன் பேர்." என்று விட்டு சிரித்தேன்.

அது ஜோக் இல்லை போலிருக்கிறது. அந்தப்பெண் 'க்ருபா'வே இருக்கட்டும் என்று வலியுறுத்த, அந்தப் பெயரிலேயே ஐ.டி. உருவாக்கிட்டோம்.

"சரி, இப்போ என்னோட யாஹு அக்கௌண்ட்ல இருந்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பறேன்." என்று விட்டு என் கணக்கிலிருந்து தமிழில் தட்டச்சடிக்க ஆரம்பித்தேன்.

"புடிச்சுருக்கா?" என்று மெதுவாக என்னருகில் அந்தப்பெண்ணின் குரல் கேட்டது.

(க்ருபா, அவ்வளவு சீக்கரம் சொல்லாத!)

"புடிச்சுருக்கே நல்லா! நான் எப்பவும் IEதான் யூஸ் பண்ணுவேன். ஃபயர்ஃபாக்ஸை விட இதுதான் ரொம்ப புடிக்கும்"

"என்னது?"

"ப்ரௌசர்தானே கேட்டீங்க?" என்றேன்.

"அது இல்லை."

"பின்ன எது?" என்றேன்.

(மனசு: 'என்னைப் புடிச்சு இருக்கா?'ன்னு கேட்டாதான் நேரிடையா பதில் சொல்வேனாக்கும்!)

எப்படி சொல்வது என்ற தயக்கத்தால் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

"ஓ, இந்த கம்ப்யூட்டரா. ஆமாம், ஆமாம். இது ரொம்ப புடிக்கும். புதுசு, செலரான். 2.4 கிகாஹெர்ட்ஸ்."

"அத கேக்கலை..." என்ற அதே டோனில் அதே குரல் இன்னும் பிசிறி.

ஐயோ பாவம்டா க்ருபா, ஏன் இப்படி விளையாடற? புடிச்சுருக்குங்கறதை சொல்லித் தொலையேன்.

"பின்ன எது?" என்றேன் விடாமல்.

பிறகு அந்த டாப்பிக் பக்கமே வரவில்லை.

இதற்கிடையில் பேசிக்கொண்டே யாஹுவிலிருந்து நான் அனுப்பிய மடல் ரெடிஃப்மெய்லுக்குள் வந்துவிட்டதா என்று பார்த்தேன். ம்ஹூம். என்ன கஷ்டகாலம்டா இது. சரி போ, என் குற்றம் இல்லை. யாஹூ குற்றம். ரெடிஃப் குற்றம்.

கிட்டத்திட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிவிட்டதால் வெளியில் களேபரம். அம்மா கதவைத் தட்டும் சத்தம். ஐயோ! இன்பாக்ஸ்ல ஈமெய்ல் வந்தா எப்படி இருக்குன்னு சீக்கரம் காமிக்கணுமே!

"நான் அப்பவே நெனச்சேன். நீ கம்ப்யூட்டர் முன்னாடிதான் ஒக்காந்துருப்பேன்னு. தனியாப்போய் பேசுடான்னு அனுப்பினா ரெண்டு மணிநேரமா கம்ப்யூட்டர் பத்திதான் பேசினயா? இன்னொரு நாள் பாத்துக்கோ அதையெல்லாம். ஏற்கனவே ரொம்ப இருட்டிப்போச்சு, நேரம் ஆச்சு களம்பணுமாம் எல்லாரும்."

அம்மா, இரு. ஈமெய்ல் இன்னும் வந்து சேரலை.

"இல்லம்மா, இரு ஒரே நிமிஷம்."

"இந்தா டிஃபன்." என்று சொல்லி அம்மா டிஃபன் தட்டை இருவருக்கும் கொடுத்ததும் செஷன் முடிவுக்கு வந்தது புரிந்தது.


* * * * ** * * * ** * * * ** * * * *

பெண்ணைப் பார்த்துப் பேசியகையோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். வழக்கம்போல் பணியகம் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது இன்னொரு புது ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.

நான் இந்த வாரம் முழுதும் எதையோ நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் எங்கள் பணியக க்ராஃபிக்ஸ் டிசைனர். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

க்ராஃபிக்ஸ் டிசைனர் முதல் முதலாக பொய் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

Saturday, April 02, 2005

சும்மா, கொஞ்ச நேரம்...

"ஃபர்ஸ்ட் ரேங்க் வரும்னு நெனச்சேன். மிஸ் ஆகிடுச்சு."

"ரெண்டாவது ரேங்க் வாங்கினதுக்கா இவ்வளவு கவலைப்படற?"

"ம்ஹ¥ம். பாஸ் ஆனாதான் ரேங்க் லிஸ்ட்லயே பேர் வருமாம். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தா பாஸ் ஆகி இருப்பேன்."

**************

"ஸ்கூலுக்கே போகாம எப்பவும் கட் அடிச்சுட்டு வெளிலயே சுத்துவானே உங்க பையன், வளர்ந்ததும் இப்போ பெரிய மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவா ஆகிட்டானா?"

"நீங்க வேற. கம்பனி கம்பனியா தாவி வேலையில்லாம இருக்கான்."

**************

"உனக்கு கணக்கு டீச்சர்ன்னா ரொம்ப புடிக்குமா ஏன்?"

"இங்க்லீஷ் தெரியலைன்னு என்னைத் திட்ட மாட்டாங்க."

"போன வாரம் இங்க்லீஷ் மிஸ் புடிக்கும்னயே?"

"உண்மைதான். அவங்களும் எனக்கு கணக்கு தெரியலைன்னு திட்ட மாட்டாங்க"

*****************

"தலைவர்க்கு ஈமெய்ல் பயன்படுத்த கத்துக்குடுத்தயே, மொதல் காரியமா என்ன பண்ணினார்?"

"தொகுதி மக்கள்கிட்ட இருந்து வர மின்னஞ்சல் எல்லாத்தையும் ஜங்க்மெய்ல் பாக்ஸ்க்கு போக செட் பண்ணினார்."

**************

"சுனாமி வருதுன்னு புரளியைக் கிளப்பிட்டு, இன்னமும் பொய் சொல்லலைன்னு சாதிக்கறாரே?"

"அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்த அவரோட மனைவியைச் சொன்னாராம்."

************