Tuesday, November 30, 2004

மேல்Kind சர்வே 1 - பாகம் இரண்டு

பாகம் இரண்டு

கேட்கப்பட்ட கேள்வி:
1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?

கவித்துவமான ஒரு நிகழ்வைப் பற்றிய இந்தக் கேள்வி, சிறப்பான பதில்களைப் பெற்றுத் தரும் என்று நம்பினோம். அதன்படியே சிறந்த பதில்கள் கிடைத்தன. அவை இங்கே:

-o0o-

அருண் வைத்யநாதன்

கோவில் குளத்தில் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளிப்பதற்காக, அவள் மெதுவாய் படிக்கட்டுகளில் மெல்லிய பாதங்களை அடி மேல் அடியாய் வைக்க..நான் செய்த புண்ணியங்கள் அங்கு பாசியாய் குவிந்து இருந்ததை, அவளது பக்திக்கண்கள் பார்க்கத் தவறி, காலை அதன் மேல் வைக்க, குடம் வானில் குட்டிக் கரணம் (ஸ்லோமோஷனில்) அடித்த அந்த அரை நொடியில், அவளை எனது கைகள் தாங்கிப் பிடித்தது. அவளது ஐடெக்ஸ் கண்கள் துடிதுடிக்க, எனது அரும்பு மீசைகளுக்கு அடியில் இருந்த உதடு சினேகமாய் சிரித்து வைக்க...தம்தன தம்தன ஆஹாஹா...ஆஹாஹா..தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன தம்தன! இந்தக் கோடாலி கண்கள், எனது பிஞ்சு நெஞ்சு மரத்தை வெட்டி சாய்த்ததை.. அறியாமலேயே அவள் பார்வையை வேகமாய் வீசிக் கொண்டிருந்தாள் என்ற (எல்லாக் கவிஞர்களுக்கும் சுலபமாய் தோன்றக்கூடிய) வசன கவிதையை, விடுவிடுவென எடுத்து விட மறந்தாலும், டி.எம்.எஸ் டிஜிட்டல் இசையில் மெல்லியதாக, ஆனால் அதே சமயம் கணீரென்று 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்...' என்று பாடுவதை அவள் கேட்டிருப்பாளா என்று மனசு சின்னக்கவுண்டர் பம்பரமாய் சுற்றியது.

மேலே சொன்னது போலெல்லாம்... ஒரு சந்திப்பும் அதைச்சுற்றிய நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்போ நேரமோ இல்லாததால் தான், அன்று 'நினைவோ ஒரு பறவை' என்று கமல்ஹாசனில் ஆரம்பித்து, 'என்னாசை மைதிலியே' என்று ரீமிக்சுக்கு சிம்பு ஆடுவது வரை, பார்ப்பதற்கு சுவையாய் இருக்கிறதோ என்னவோ?! நான் என்னுடைய மனைவியை, 'இவதாண்டா என் பொண்டாட்டி' என்று டாக்டர் ராஜசேகர்தனமாய் சொல்வதற்கு முன்னால் பார்த்தது, நான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்தில். அவள் வேலைக்கான நேர்முகத் தேர்வில் தேர்வாகி, உள்ளே இன்னும் சில வெற்றி பெற்ற புதுசுகளோடு உட்கார்ந்திருந்தாள். அப்போது அமெரிக்கா வருவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாய் ஈடுபட்டிருந்ததால், அலுவலகத்துக்கு நான் வருவதென்பது, ஆடிக்கொரு தடவை நடக்கும், அடிக்கடி நடக்காமலிருக்கும் சம்பவம். அப்போது என்னோடு பணிபுரிந்த நண்பனொருவன்,"டேய், நம்ம டீமுக்கு புதுசா நாலஞ்சு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க..போய்ப் பாரு!" என்று கண்ணடித்தான். வெட்டியாய் திரிந்து கொண்டிருந்த எனக்கு, இது போன்ற வாய்ப்புகளெல்லாம் கிடைத்ததென்றால் விட்டு விட மனசே வராத ரம்மியமானதொரு காலம். பட்டீரென கதவைத் திறந்து கொண்டு, தலையை நுழைத்து...ஒரு நோட்டம் விட்ட எனது கண்கள், இவள் மேல் மட்டும் இரண்டாவது முறை வேண்டுமென்றே தானாக ஸ்கேன் செய்தது. அப்போது எனது மனதில் தோன்றிய நிஜமான எண்ணம் என்னவென்றால், "அட...இந்தப் பொண்ணு நல்லாயிருக்கே!"


(தலைவா, 'என் ஆசை மைதிலியே' ரீமிக்ஸில சிம்பு ஆடுறது தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சதா? எங்களோட 'அவங்க' கஷ்டப்பட்டு ஆடினது தெரியலையா? என்ன ரசனையோ உங்களுக்கு போங்க!!)

-o0o-

தேசிகன்

பெண் பார்க்க போனதைப் பற்றி சொல்வதற்கு முன் என்னை பற்றி...

நான் சென்னை வாசி. 1 1/2 வருடங்களாக பஸ் ஸ்டண்ட், பீச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டு இருந்தேன் - எல்லாம் ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கலாம் என்ற ஆசையுடன் (கொஞ்சம் அதிகமாக சினிமா பார்க்கும் ஆசாமி நான்). இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோயிலில் ஒரு பெண்ணை பார்த்து நான் அசடு வழிய..... அதை பற்றி அப்புறம்
சொல்கிறேன். இதல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்து, என் அம்மாவுடன் பெண் பார்க்க சென்று இருந்தேன்.

"எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்து கேட்டு விடு"

சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க் வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லேரும் என்னை எட்டி பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய் குட்டி என்னை பார்த்து செல்லமாக வாலையாட்டியது!

பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லேரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னை கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்த கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.

அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணை பிடித்திருக்கா?"
"எது பாட்டி பொண்ணு?"
"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"

அதற்க்குள் என் அம்மா என்னை பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். (அடுத்த முறை மணிமேகலை பிரசுரத்திடம் "பெண் பார்க்கும் போது கேட்கும் கேள்விகள்" புத்தகம் இருக்கா என்று கேட்க வேண்டும்)

சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
"எங்கு பி.காம் படிச்ச?"

கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாக பதில் சொல்ல...

எனக்கு அந்த பெண்ணை... நீங்களே முடிவு செய்யுங்களேன்!


-o0o-

என். சொக்கன்

நான் என் மனைவி உமாவை முதன்முதலாகப் பார்த்தபோது, எங்கள் இருவருக்குமே வயது பத்துக்குக் குறைவுதான்.

அந்த வயதில், இவர்தான் மனைவியாக வரப்போகிறவர் என்றோ, அதுபற்றிய கற்பனைகள்/பயங்க(?)ளோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், எங்கள் இருவருக்கும் திருமணப் பேச்சு தொடங்கியபின், அவரைச் சந்தித்தது பற்றி யோசித்துப் பார்க்கிறேன்.

அப்போது நான் ஹைதராபாதில். உமா திருச்சி அருகே ஆங்கரை என்ற கிராமத்தில். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தபோது, இந்த விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டார்கள்.

நான் உடனடியாக சம்மதித்துவிடவில்லை. அதற்கான காரணங்களை இங்கே விவரித்தால், ராத்திரிச் சாப்பாடு நிச்சயமில்லை என்பதால், சில நாள் பிடிவாதத்துக்குப்பின், அரைகுறையாக சம்மதித்தேன் என்றுமட்டும் சொல்லிவைக்கிறேன். அதில் ஒரு முக்கியமான நிபந்தனை, 'உமாவை நேரில் பார்த்துக் கொஞ்சம் பேசவேண்டும், அதன்பிறகுதான் முழுமையான சம்மதத்தைச் சொல்வேன்', என்று.

அதற்காக, நானும், என் அத்தையும், திருச்சிக்குச் சென்றோம். உமா வீட்டிற்குச் சென்று, விபரம் சொல்லி, மாடியிலிருந்த ஒரு தனியறையில் சந்தித்தோம். சுவரில் ஒரு ஓரமாக ரஜினிகாந்த் படம், பக்கத்திலேயே சுவாமி ராகவேந்திரர். சற்றுத் தொலைவில், 'முயற்சிகள் தவறலாம், முயற்சி செய்யத் தவறக்கூடாது', என்றெழுதி, அதைச் சுற்றிலும் ஒரு வண்ணக் கோலம். பக்கத்தில் ஒரு சிறு கதவு திறந்திருக்க, மிச்சமிருந்த மொட்டை மாடியில், கரையான் சகிதம் நிறைய தென்னங்கீற்றுகள்.

சில நிமிடங்களுக்கு அவற்றையே தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம், கூச்சமோ, வெட்கமோ இல்லை. ராத்திரி முழுக்க கஷ்டப்பட்டு யோசித்து, பேச நினைத்ததெல்லாம் மறந்துபோச்சு.

முதலில் பேசியது நானா, அவரா என்று நினைவில்லை. ஆனால், நான் கேட்டது ஒரே ஒரு கேள்விதான், 'இந்தக் கல்யாணத்தில உனக்கு முழுச் சம்மதமா ? இல்லை, அப்பா-அம்மா சொன்னதுக்குத் தலையாட்டிட்டியா?'

'சம்மதம்தான்', என்று உமா சொன்னபோது, அதில் பொய் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே, 'எனக்கும் முழுச் சம்மதம்', என்று அங்கேயே சொல்லிவிட்டேன்.

அதற்குமேல் பேசுவதற்குள், கீழேயிருந்து, 'சாப்பிட வாங்க', என்று குரல் வந்துவிட்டது. கல்யாணச் சாப்பாடு.


-o0o-

ரவியா

கல்யாணம் காட்சி என்று யோசிக்காத வயதில் தான் என்னவளை பார்த்தேன். அதெல்லாம் "துள்ளித்திரிந்த காலம்" (அ) "துள்ளுவதோ இளமை காலம்" என்று செல்வராகவன் போன்றவர்கள் சொல்லித்தான் தெரியுது. அப்பொழுது என்னவோ ஸ்கூல், டியுஷன், விளையாட்டு என்று நேரம் போவதே தெரியாத காலம். பாண்டியில் நாங்கள் குடியிருக்காத தெருவே கிடையாது என்று சொல்லுமளவிற்கு அடிக்கடி வீடு மாற்றிக் கொண்டிருப்போம். அப்படித் தான் என் பதினாலாவது வயதில் அவள் குடியிருந்த தெருவில் அவள் வீட்டிற்கு எதிர் வீடு பக்கத்தில் தஞ்சமடைந்தோம்.

உடனே சினிமா ஸ்டைலில் சைட், காதல் என்று கற்பனை பண்ணிக்காதீங்க. பதினாலு வயசுல உங்களுக்கே உங்களை புடிச்சுதா? அதேமாதிரிதான். அரும்பு மீசை. கால்கள் சருமம் தெரிய அரை கால் சட்டை (அப்பவெல்லம் shorts என்று சொல்ல மாட்டாங்க. விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இதே கோலம்தான்.) பெண்களைப் பார்த்தாலே ஒரு வெட்கம். அதிலும் எதிர் வீட்டிலும் அதன் அடுத்த வீட்டிலும் குறும்புடன் புதிதாய் வந்தவனை ‘எடை போடும்’ பெண்கள்.. கேட்கவேண்டுமா? சைக்கிளில் வந்திறங்கி அதை குறட்டில் (ஆலோடி) ஏற்றிவிட்டு வீட்டுக்குள் செல்வதிற்குள் "க்ள்க்.. க்ள்க்" என்று சிரிப்புடன் 3 ஜோடி கண்கள் நோட்டமிடும். (என் மூக்கைப் பார்த்து தான் சிரித்ததாக பிறகு தெரிந்துக்கொண்டேன். நம்ம சுந்தர் மட்டும் மூக்கை நுழைக்காமலிருந்தால் அதேயே என் புனைப் பெயராய் தேர்ந்தெடுத்திருப்பேன்.)

சில நாட்களில் என் அக்காவும் அவளின் அக்காவும் நண்பிகளாகி வீட்டுக்கு வரப் போக ஒரு நாள் அதிகார பூர்வமான அறிமுகம் நடந்தது. அப்போது தான் நேரில் அருகில் பார்த்தேன். முகத்தில் ஒரு பயம் கலந்த வெட்கம். தோழியர்களுடன் சேர்ந்து இவ்வளவு நாட்கள் என்னை வெறுப்பேற்றியதை எங்கே அவள் அக்காவிடம் சொல்லிவிடப் போகிறேனோ என்றொரு அச்சம். இந்த கோழி முட்டை கண்ணா (இப்பத்திய ஜோ மாதிரி - பழைய ஜெயசுதா மாதிரி) இப்படி என்னை வாட்டியது என்று எனக்கு ஒரே கோபம் கலந்த ஆச்சரியம்.

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- அக்கினி நட்சத்திர பிரபு-கார்த்திக் ஸ்டைலில்.

(அப்புறம் பழி வாங்கும் படலங்கள், மோதல்களெல்லாம் இன்னொரு நாள்).

சில வருடங்களில் மறுபடியும் வீடு மாற்றல். அதே ஊரில்தான். எதிர் வீட்டுப் பையனை பார்க்கப் போகும் சாக்கில் சண்டைகள் தொடர்ந்தது. (அவள் காலேஜுக்கு போகும்போது பின் தொடர்ந்து துணைப் போகும் ரோமியோக்களைப் பற்றிக் கூறி சீண்டுவேன்)

பிறகு வெளி நாட்டிலிருக்கும் அவளின் அக்கா அவளை அவரிடம் அழைத்துக் கொண்டார். மூன்று வருடம் கழிந்தது. நானும் அதே நாட்டிற்கு செல்லும் நாள் வந்தது. *மரியாதை நிமித்தம்* அவளின் அம்மாவிடம் விடைபெறச் சென்றேன். சில சிறிய பொருள்களை அவரின் மகளுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்று கேட்டார். சரியென்றேன். நிச்சயம் விலாசம் கிடைக்குமே. இப்போது நினைத்துப் பார்க்கையில் உண்மையிலேயே *மரியாதை நிமித்தம் தான்* அவரைப் பார்க்க சென்றேனா என்று சரியாகத் தெரியவில்லை. :))

கைவசம் தொலைபேசி எண் இல்லை. டைரெக்டரியில் தேடவும் தோன்றவில்லை, முன் அறிவிப்பில்லாமல் ஒருவர் வீட்டிற்கு நேரில் செல்வது (ஐரோப்பில்) மரியாதையில்லை என்றும் தெரியாது. ஒரு நாள் ஞயிற்றுக் கிழமை நேரில் சென்று காலிங் பெல்லினேன். கதவை திறந்த அவளின் சகோதரிக்கு ஒரே திகைப்பு. பொடியனாக பார்த்திருந்த என்னை இப்போழுது அடையாளம் தெரியவில்லை. நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்குள் கதவின் வழியே ஒரு ஜோடி கண்கள் ஆச்சரியமாக விரிந்தது.

"நம்ம ரவிதான்" என்று ஒரு குரல். அந்த "நம்ம" எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உள்ளே சென்றவுடன் ஒரே அதிர்ச்சி. "பொம்பள தனுஷா" இருந்தவள் ஒல்லிப்பிச்சான் "ஜோதிகா" வாக மாறியிருந்தாள். கோழிமுட்டை கண்கள் முகம் பெருத்திருந்ததால் சிறுத்திருந்தது. பாரம்பரிய வழக்கமான அறிமுகத்திற்குப் பின் பேசிக்கொண்டிருக்கையில் கண்களில் ஒரு கம்ப்லிசிட்டி (complicity) தெரிந்தது. வீட்டில் ஸீரியசாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருப்பதாக அவளின் சகோதரி சொல்லும் போது முகத்தில் ஒரு வெட்கம். நாள் முழுதும் தனியே பேச சந்தர்ப்பம் கிடைக்காவிடினும் கண்களாலும் பல விஷயங்கள் புரிய வைத்தாள்.

அந் நாட்டைப் பொருத்தவரை என்னைவிட சீனியர் என்ற ஒரு பெருமை, அக் காரணத்தினாலேயே அந்நாட்டு சம்பரதாயங்கள் கடைப்பிடிப்பதில் (போஜன மேசை விதிகள்) எதாவது தவறு செய்து விடுவேனோ என்ற பயம் கலந்த அனுசரணை. நண்பனை காப்பாற்ற கண்களாலேயே எச்சரிக்கை. சிறு வயதில் பார்த்த அசட்டு நண்பன் மேல்படிப்பிற்காக வெளி நாட்டிற்கு வந்திருப்பதில் ஒரு பெருமை. ஒன்றும் பேசாமலேயே!

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- ஆட்டோகிராப் சேரன்-ஸ்னேகா ஸ்டைலில்.

அவளின் அக்கா - மாமாவிற்கு என்னை மிகவும் பிடித்துப் போயிற்று. என்னை யாருக்கு தான் பிடிக்காது? (இப்பொழுது கேட்டால் "சரியான காக்கா" என்பாள்) என்னை குடும்ப நண்பனாக பாவித்து அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் அழைப்பார்கள். (ஒரு வேளை போட்டோ பிடிக்க ஆள் தேவைப்பட்டதால் இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.) அச்சந்தர்பங்களில் கல்யாண வயதை எட்டிப்பார்க்கும் பெண்களின் பெற்றோர்கள் என்னைப் பற்றி "விசாரித்ததாக" பிறகு என்னிடம் சொல்லும் போது கண்களில் தெரிந்தது பெருமை கலந்த பொறமையா? . இப்படியாக 2 வருடம் கழிந்தது. இடையில் இந்தியா சென்றபோது கல்யாண தரகர் வேலை வேறு.

கட்டாய ராணுவச் சேவைக்காக ஒரு வருடம் ராணுவத்தில் இருந்த பொழுது தான் கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. சில நாட்களில் குடும்ப காரணங்களுக்காக ஐரோப்பாவில் வேறோரு நாட்டில் அவளும் தங்க நேர்ந்தது. அந்த Autumn-ல் தான் எங்கள் நட்பு ஆட்டம் கண்டது. ஐரோப்பாவில் கோடைக் காலம் முடிந்து Autumn வரும் போது சிலர் மன உளைச்சல்களுக்கு ஆளாவது உண்டு. தனிமையில் இருந்த இருவருக்கும் இந்த முன் குளிர்காலத்தில் எங்கள் கடிதங்களே ஒரே ஆறுதல். ஒருவருக்கொருவர் கடிதங்களிலேயே ஆறுதல் சொல்லப் போய் அவைகளின் சாரமே மாறிவிட்டது. எப்படி? எப்போது? என்றுதான் தெரியவில்லை. ஆனால் எங்கள் 'நட்பு' இறந்துவிட்டது என்று இருவருக்குமே தெரிந்திருந்தும் 'எந்தக் கட்டத்தை' அடைந்துள்ளது என்று எங்களுக்கே தெரியவில்லை.

டிசம்பர் லீவில் சந்திப்பதாக முடிவு. அந்த 'நன்னாளும்' வந்தது (The ‘D’ Day). நான் சென்ற நேரம் வீட்டில் யாருமில்லை. கதவை திறந்தவளை எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவள் என் பால்ய தோழியே இல்லை. அந்த கண்களில் தெரிந்தது வெட்கமா? பயமா? மகிழ்ச்சியா? ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவருக்கும் நட்பை தாண்டி எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறோம் என்று புரிந்தது.

அதுவே எங்கள் முதல் சந்திப்பு! -- கமல் பட ஸ்டைலில். :grin:

பி;கு : இப்போழுது என் (எங்களின்) பழைய கடிதங்களைப் படித்துவிட்டு "நாம் தோழர்களாகவே இருந்திருக்கலாம்" என்று அவள் சொல்லும் போது என் நமட்டு சிரிப்பே பதில்... நான், என்னை சீண்டுவதற்காகத் தான் இப்படிச் சொல்லுகிறாள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


-o0o-

சர்வே முடிவு

சர்வேன்னு ஒண்ணு நடத்தினா அதுக்கு முடிவுன்னு ஒண்ணு சொல்லணும்-னு ஒரு எழுதப்படாத விதி இருக்குங்க.

எட்டு பேர் எங்களுக்கு பதில் அனுப்பினாங்க. படிச்சுப் பார்க்கும் போது ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்திருக்காங்க. வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அனுபவங்கள். ஆனா அந்த பில்டப்பையெல்லாம் நீக்கிட்டு உள்ள பார்த்தா.. ஏதோ இருக்குங்க. "இந்தப் பொண்ணு தான் நமக்கு"-ன்னு உள்ள ஒரு பல்பு எரியுதுன்னு தெரியுதுங்க.

அதனால சர்வே முடிவாக என்ன சொல்றோம்னா, அந்த பல்பை நீங்க நோட்டம் விட்டுக்கிட்டே இருங்க. யாரைப் பார்க்கும் போது பல்பு எரியுதோ, அவங்க தான் உங்களோட 'அவங்க.' அந்த பல்பு எரிஞ்சா தான் ஒளிமயமான வாழ்க்கை. புரியுதுங்களா?

அடுத்த சர்வேயில இதே மாதிரி சுவாரஸ்யமான கேள்வி மற்றும் அதை விட சுவையான பதில்களோட சந்திப்போம். அது வரைக்கும் ஜூட் விட்டுக்குறோம்ங்க.

Friday, November 26, 2004

அவர்கள் சிரிக்க இவர்கள் சிந்திக்க

"டேட்டா எண்ட்ரி பண்ற பொண்ணுகிட்ட காதல் கடுதாசி குடுத்தது தப்பாப் போச்சு."


"ஏன், என்ன ஆச்சு?"



"என் டேபிள்ல மௌசுக்கும், மனசுல ஒனக்கும் இடம் கிடையாதுன்னு ஒரே போடா போட்டுட்டா"




"கார்த்தால எல்லாம் நான் சமையல் வேலையை கவனிக்கறதே இல்லை. கால் மேல கால் போட்டு செம தூக்கம் தூங்குவேன்"


"அட பரவாயில்லயே! உங்க மனைவி ஒன்னும் சொல்மாட்டாங்க?"


"ச்சே, ச்சே. நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு வந்து களைப்பா இருப்பேன்னு அவளுக்கு புரியும். சாயங்காலத்துக்குள்ளயாவது சமைச்சு முடிக்காட்டிதான் திட்டுவா"




"'படிதாண்டா பத்தினி'னு அவர் சொன்னப்ப எனக்கு மொதல்ல புரியலை."


"அப்பறம்?"


"தெனமும் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கி வாசல் படிதாண்டா கதின்னு கிடப்பார்ன்னு போய்ப் பார்த்தப்பதான் புரிஞ்சது"



"அந்த மகளிர் சங்கத் தலைவி ஏன் ரொம்ப அப்செட்டா இருக்காங்க?"



"அதுவா, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்னு தன் வாயாலேயே மேடைல ஒத்துக்க வேண்டியதாப் போச்சாம்"




கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்


கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும்





Thursday, November 25, 2004

விருந்தினர் பதிவு: கே.வி.ஆர். (KVR)

நம்ம கேவியாரு இருக்காரு பாருங்க, அவரோட வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டத்துல இருக்காரு. கூடிய சீக்கிரம் happyயான பேச்சுலர் ஸ்டேஜில இருந்து /your own adjective here/யான பேச்சிலர் ஸ்டேஜுக்குப் போறாரு. போறதுக்கு முன்னால ஒரு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து உங்களுக்கெல்லாம் வழி காட்டிட்டுத் தான் போவேன்னு ஒரே அடம். அவருக்கு மேடை போட்டுக் குடுக்குறதில மேல்Kind குழுவுக்கு ரொம்பப் பெருமை.

(அப்புறம், அவரோட கட்டுரைக்கு நடுநடுவில சேப்புக் கலர்ல கமெண்ட் விட்டிருக்கிறது மட்டும் நாங்க. ஏதோ, எங்களால முடிஞ்ச ஒரு கைங்கரியம்!!)

-o0o-

ஒருதலை ராகங்கள்

ஒரு மனுஷனுக்கு கொஞ்சம் தில் இருக்கலாம், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்துட்டா இப்போ நான் செய்யிற காரியம் மாதிரி தான் செய்விங்க. வர்ற இருவத்தெட்டாந்தேதி நிச்சயதார்த்தத்தை வச்சிக்கிட்டு எவனாவது தன்னோட ஒருதலை ராகங்களை பாடுவானா? இதோ நான் பாடப்போறேன். ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ....

ஒரு பையன் சைட் அடிப்பதில் கூட ஒரு வரைமுறை வைத்து சைட் அடிச்சா நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு அது புரியவே மாட்டேங்குதுப்பா. அது என்னடா வரைமுறைன்னு கேக்குறிங்களா??, நான் ஒரு பொண்ணை சைட் அடிக்கிறப்போ வேற யாரையும் சைட் அடிக்க மாட்டேன். சைட் அடிக்கிறதுல கூட ஒரு கற்பு நெறிய follow பண்றவன் நான்.


சாலமன் பாப்பையாவைக் கூப்பிடுங்கப்பா. பட்டி மன்றம் வச்சு முடிவு பண்ணிடலாம் - கற்பில் சிறந்தவர் கண்ணகியா? கே.வி.ஆரா?

சரி, இவ்ளோ கற்போட (!!!??!!) ஒருத்தன் நமக்காக ஏங்குறானேன்னு நினைச்சு ஒரு பொண்ணாவது green signal காட்டினாங்களா?? அதுவும் இல்ல. நமக்கு ஒரு ராசி இருக்கு, நான் யாராவது ஒருத்தரை (அதாவது ஒருத்தியை) சைட் அடிக்க ஆரம்பிச்சா, அந்த பொண்ணு வேற ஒருத்தனுக்கு engage ஆய்டும் (இல்லைன்னா already engaged ன்னு தெரியாம நான் சைட் அடிச்சிருப்பேன்).

இதையெல்லாம் பத்தி பேசிகிட்டு இருக்குறப்போ ஒரு நாள் என் தங்கை "அண்ணா, கன்னி ராசி இருக்குறவங்கள பொண்ணுங்க சைட் அடிப்பாங்க, friendஆ இருப்பாங்க, ஆனா லவ் மட்டும் பண்ணமாட்டாங்க"ன்னு சொல்லுச்சு, யோசிச்சு பார்த்தா உண்மை தானோன்னு தோணுது.


ஹா.. ஹா.. ஹா.. - கன்னி ராசிக்காரர்களைப் பார்த்து மற்ற ராசிக்காரர்கள் சிரிக்கும் வெடிச்சிரிப்பு.

சரி, இந்த மாதிரி அழிச்சாட்டியங்களைல்லாம் எப்போடா ஆரம்பிச்சன்னு கேட்டா?? teen ageன்னு எந்த புண்ணியவான் வயச நிர்மாணிச்சானோ தெரியல, கரெக்டா சைட் அடிக்கிற புத்தி சொல்லாம கொள்ளாம தானாவே வந்துடுச்சு. அதுலியும் எங்கப்பா, என்னை எப்பவுமே co-edல தான் படிக்க வச்சாங்க (எவ்ளோ பெரிய நல்ல காரியம் தன்னோட பையனுக்கு செய்யுறோம்ன்னு தெரியாமலே செய்துட்டாங்க).

ஏழாவது படிக்கிறப்போ பக்கத்து வகுப்பு பொண்ணு, கலைக்கழக போட்டிக்காக "சூதர்மனைதனிலே அண்ணே... தொண்டு மகளிருண்டு, சூதிர் பணயமென்றால் அங்கோர் தொண்டச்சி போவதில்லை"ன்னு practice பண்றப்போ "அடடா, என்னமா பேசுறா பாருடா"ன்னு ஆரம்பிச்ச நம்ம சைட் செ்ஷன் காலேஜ் முடியுற வரைல ஒரு non-stop actionஆ நடந்தது.

அந்த "சூதர்மனை" பொண்ணை நான் சைட் அடிச்சப்போ என் friend இஸ்மாயில் வந்து ஒரு நாள் "மச்சான், நானும் அவளும் ரொம்ப closeடா, ஆனா அவ அப்பா எங்க கல்யானத்துக்கு என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு"ன்னு சொன்னான் (பிஞ்சில பழுக்குறதுன்னா இதான்).


கேட்டீங்கள்ல நியாயத்தை? ஏழாவது படிக்கும்போது சைட்டடிச்ச இவரு பிஞ்சில பழுக்கலையாம். அந்த friend மட்டும் தான் பிஞ்சில பழுத்தவராம். நல்லா இருக்கே கதை.

அட தேவுடா, நம்ம சைட் அடிக்கிற பொண்ணு இவனோட ஆளா?? தப்பு பண்ணிட்டோமேன்னு நினைச்சு மனசுலேர்ந்து தூக்கி எறிஞ்சுட்டேன். இப்டியே ஏழாவது போய்டுச்சு.

எட்டாவது வந்தப்போ எங்கப்பா இனிமே பையன் நம்ம கட்டுப்பாட்டில இருக்கட்டும்ன்னு நினைச்சாங்களோ என்னமோ (வெளில இருந்தா கெட்டு போய்டுவேனோன்னு பயந்து), அவங்க ஸ்கூலுக்கே என்னை மாத்தி கொண்டுவந்துட்டாங்க. எட்டாவது வந்ததும் நான் ரொம்பவே படிக்கிற பையனாய்ட்டேன். அப்படி இருந்தாலும் நம்மள விதி சும்மா விடுதா, அதான் இல்ல. நான் ஆர்வக் கோளாறுல பாடத்தை ஒப்பிக்கிறதையும், கணக்குல்லாம் ரொம்ப வேகமா போடுறதையும் பார்த்து நம்மள ஒரு பொண்ணு அப்பப்போ பார்த்துகிட்டே இருக்கும். நமக்கு இங்க ஜிவ்வுன்னு ஆய்டுச்சு. ஒவ்வொரு தடவையும் வாத்தியார் கிட்ட ஒப்பிச்சுட்டு உக்காரும்போது நம்மாளு பார்க்கிறாளான்னு ஒரு look விட்டுகிட்டு confirm பண்ணிக்குவேன். கிராமத்து பள்ளிக்கூடம், அதனால பொண்ணுங்க கிட்ட பேசினா வாத்தியார் உதைப்பாரோன்னு பேச எல்லாம் தைரியம் வந்ததில்ல. இப்டி dreamல போய்கிட்டு இருந்த நம்ம காதல் (ஒவ்வொரு தடவை சைட் அடிக்கும்போதும் அது தான் காதல்ன்னு நினைச்சுப்பேன், அது புட்டுகிச்சின்னா சே சே இது இனக்கவர்ச்சின்னு ஒதுக்கிடுவேன்) ஒரு நாள் ரோட்ல யாரோ ஒருத்தன் கிண்டல் பண்றான்னு (யார் அந்த வில்லன்னு தெரியல) அந்த பொண்ணு வீட்டுல complain பண்ண, அந்த பொண்ண பள்ளிக்கூடத்த விட்டே அவங்க வீட்டுல நிப்பாட்டிட்டாங்க.

9, 10வதுல்லாம் படிப்புல கொடிக்கட்டி பறந்த காலம். எனக்கும் இன்னொரு பையனுக்கும் யார் first rank வாங்குறதுன்னு பயங்கர போட்டி, அவன் வேற பழம் கேஸ். சரின்னு தீவிரமா போட்டில இருந்த காலம். ஒரு தடவை, சிதம்பரம் சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா ஸ்கூலுக்கும் ஒரு கணக்கு போட்டி நடந்துச்சு. அதுல நம்ம first வந்தாச்சு. நியூஸ்பேப்பர்ல எல்லாம் photo வந்துச்சு (எங்கப்பா, நான் state first வாங்கி பேப்பர்ல photo வரணும்னு கண்ட கனவை நான் 4 மாசம் முன்னாடியே நிறைவேத்திட்டதால state first வாங்கவேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்). ஸ்கூல்ல ப்ரேயர்ல வச்சுல்லாம் பாராட்டினாங்க. அந்த நேரத்துல ஒம்பதாவது படிச்ச ஒரு பொண்ணு எனக்கு 5star மாதிரி ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்லிச்சு. அன்னைலேர்ந்து, "மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி" கணக்கா சைட் அடிக்க ஆரம்பிச்சேன். அந்த பொண்ணா வந்து சாக்லேட் கொடுத்தாலும் அதுக்கு அப்புறம் பேசுற தைரியம் எனக்கு வரல (இங்கே ஒரு விஷயம் சொன்னா நம்புவிங்களா, நான் பொண்ணுங்க கிட்ட பேசவே கூச்சப்படற party). கொஞ்ச நாள் கழிச்சு நம்ம காதுக்கு ஒரு news வந்துச்சு, அந்த பொண்ணு வேற ஒருத்தனுக்கு engage ஆய்டுச்சு, அது பத்தாவது முடிச்சதும் அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போவுதுன்னு. அப்புறமென்ன, வழக்கம் போல "எங்கிருந்தாலும் வாழ்க" தான்.


கரெக்டா சொல்லுங்க தலைவா, அவங்க குடுத்தது சாக்லேட்டா, அல்வாவா?

+1, +2 சிதம்பரத்துல ஒரு ஸ்கூலுக்கு போய்ட்டேன். அங்கே நம்ம பேர் ஏற்கெனவே பாப்புலர் (எல்லாம் கணக்கு போட்டி செய்த மாயம், எங்கேயோ ஒரு பேர் தெரியாத பள்ளிகூடத்திலிருந்து வந்து பரிசைத் தட்டிகிட்டு போய்ட்டதால). அங்கே ஒரு பொண்ணு, நம்ம maths, chemistry notesல்லாம் அடிக்கடி வாங்கிட்டு போகும். பொண்ணு வேற பாக்குறதுக்கு நல்லா.. ரொம்ப நல்லா.. இருக்கும். நானும் வழக்கம்போல சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, நம்ம friend ஒருத்தன் 2 wheelerல வந்து கடலை போட்டு 1 வாரத்துல தேத்திகிட்டு போய்ட்டான். அதோட, சே படிப்புக்கெல்லாம் இந்த பொண்ணுங்க மசியாதுங்க, நம்ம நல்லா bodyய develop பண்ணனும், sportsல கலக்கினா தான் ஒரு ரசிகை பட்டாளமே கூட வரும்ன்னு நினைச்சு தீவிரமா உடம்ப தேத்த ஆரம்பிச்சேன். ஆனா, கடைசிவரை ஒன்ணும் நடக்கலை.

வருஷா வருஷம் ஊர்ல திருவிழா வர்ற மாதிரி இவருக்கு காதல் வந்திருக்கு பாருங்களேன்..!!

காலேஜ் வந்ததும் காதல் என்பதே சுத்த பொய், எல்லாம் மாயை, பொண்ணுங்க எல்லாம் டுபுக்கு கேஸுங்கன்னு இருந்தேன் (ஏன்னா, ஸ்கூல்ல நான் பார்த்த காதல் எல்லாமே அடுத்த வரு்ஷம் புட்டுகிச்சு). அதோட இல்லாம எங்க செட்ல வந்த பொண்ணுங்க எல்லாம் எனக்கு friendsஆ வேற ஆய்ட்டாங்க. நம்ம காதலுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி கூடுதல் மரியாதைய friendshipக்கு கொடுக்குற பார்ட்டி. அதனால, friendsஅ sight அடிக்கிறதில்ல. second year போனதும், ஜூனியர் செட்ல ஒரு அட்டகாசமான பொண்ணு வந்துச்சு. அவ வேற நான் அவங்க வகுப்ப கடக்கும்போதெல்லாம் ஒரு லுக் விட்டுகிட்டு இருந்தா (அவ ஏன் லுக் விட்டான்னு இதுவரை எனக்கு தெரியல). நம்ம தான் கண்டதும் காதல்ல பெரிய ஆளாச்சே, so ஒரே அடில knock out ஆய்ட்டேன். இந்த தடவை தான் என் friend ஒருத்தங்க கிட்ட ஒரு திடீர் ஞானோதயத்துல "இந்த வயசுல நான் லவ் அது இதுன்னு சொல்றேனே, இதெல்லாம் நல்லாதா"ன்னு கேட்டுவைக்க, அவங்க "பருவத்துல பன்னி கூட அழகா தான் இருக்கும்"ன்னு ஆரம்பிச்சு ஒரு 1 மணி நேரம் அட்வைஸ் மழையா பொழிஞ்சாங்க. அதுலேர்ந்து அவங்க கூட இல்லாத நேரத்துல மட்டும் சைட் அடிக்கிறதுன்னு பொழப்ப ஓட்டிகிட்டே இருந்தேன். அப்ப தான் நான் அதுவரை பண்ணாத ஒரு தப்பை செய்துட்டேன். இதுவரை சைட் அடிச்ச பொண்ணுங்களை பத்தி வெளில சொன்னதே இல்லை, ஆனா இந்த தடவை பசங்ககிட்ட உளறி வைக்க காலேஜ் முழுக்க நம்ம பேர் பிரபலம் ஆய்டுச்சு (இல்லைன்னா, அந்த பொண்ணு கிடைக்காத பட்சத்துல வேற ஒன்னை சைட் அடிச்சுருக்கலாம்). இதுல என்ன ஒரு கூத்துன்னா, இப்படி கனவுப் பட்டியல்ல இருந்த ஒரு பொண்ணுகிட்ட கூட நான் சரியா பேசினதே இல்ல, கடைசிவரை சொல்லவுமில்ல.

இப்போ, போட்ட ஆட்டங்களை எல்லாம் நினைச்சு பாக்குறேன். ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை தான் கொடுத்துருக்கான், இல்லைன்னா என்னை கொண்டுவந்து சவுதி அரேபியாவுல தள்ளுவானா????


ஆண்டவன் குடுத்த தண்டனைன்னு சவுதி அரேபியாவை சொல்றீங்களா? அல்லது நிச்சயதார்த்தத்தை சொல்றீங்களா? ஹி ஹி.. அய்யோ அடிக்க வராதீங்க கே.வி.ஆர்.!!

சென்னையில் ஒரு 'மழை'க்காலம்

நான் 'தண்ணி' போடும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அவளுக்குத் தெரிந்தால் தொலைந்தேன்.

அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்புகிறேன். அவள் சமைத்துக்கொண்டிருக்கிறாள். சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கிறது. மெல்லப் பூனைநடை நடந்து வீட்டிற்குள் நுழைகிறேன். கருப்புநிற அலமாரியைத் திறந்து பாட்டிலை எடுக்கிறேன். சுவற்றில் மாட்டித் தொங்கிக்கொண்டிருக்கும் வீரசிவாஜி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மற்றபடி யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

அந்த அரதப்பழசான கழிநீர்த்தொட்டிக்கு மேலே அடித்திருக்கும் பலகையில் தம்ளர்கள் கவிழ்த்துவைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு தம்ளரை எடுக்கிறேன். அமைதியாக ஒரு பெக். தம்ளரை அலம்பி மீண்டும் பலகைமேல் வைத்துவிட்டு, பாட்டிலை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறேன். வீரசிவாஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார். சமையலறைக்குள் எட்டிப்பார்க்கிறேன். உருளைக்கிழங்குப் பொரியலுக்கு நறுக்கிக்கொண்டிருக்கிறாள். யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

எதாவது பேச்சுக்கொடுக்கவேண்டும். "பக்கத்துவீட்டு சாமிநாதன் சார் பொண்ணுக்கு ஏதாச்சும் வரன் வந்துச்சா?". "பாவங்க, இன்னும் வேளை கூடி வரலை. பாத்துக்கிட்டே இருக்காங்க".

மறுபடியும் வெளியே வருகிறேன். கருப்புநிற அலமாரியிலிருந்து ஏதோ சின்ன சத்தம். ஆனால் நான் பாட்டிலை சத்தமில்லாமல் எடுக்கிறேன். கழிநீர்த் தொட்டியின் மேலே இருக்கும் அந்த அரதப்பழசான பலகையிலிருந்து தம்ளரை எடுக்கிறேன். அமைதியாக ஒரு பெக். பாட்டிலை அலம்பிக் கழிநீர்த்தொட்டியில் வைத்துவிட்டுக் கருப்புநிறத் தம்ளரை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறேன். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

"சாமிநாதன் சார் பொண்ணுக்கு அப்படி என்ன வயசாயிடிச்சு?" "என்ன வெளையாடறீங்களா? ஆடி வந்தா முப்பது. இப்போவே அரைக்கிழம்". அய்யோ, மறந்துபோச்சு! "ஓ..ஓ.."

மறுபடியும் நான் அந்த கருப்புநிற அலமாரியிலிருந்து உருளைக்கிழங்குகளை எடுக்கிறேன். அலமாரிதான் அதற்குள் இடம் மாறியிருக்கிறது. பலகை மேலிருந்து பாட்டிலை எடுத்து, கழிநீர்த்தொட்டியில் அமைதியாக ஒரு பெக். வீரசிவாஜி சத்தம்போட்டு சிரிக்கிறார். பலகையை உருளைக்கிழங்கில் வைத்துவிட்டு வீரசிவாஜியை அலம்பிக் கருப்புநிற அலமாரியில் வைக்கிறேன். அவள் கழிநீர்த்தொட்டியைத் தூக்கி அடுப்பின்மேல் வைக்கிறாள். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

"சாமிநாதன் சாரைக் கிழம்ன்றியா! கொழுப்புடீ உனக்கு!" "எதாவது உளறாம போய் அமைதியா உக்காருங்க".

உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுத்து கருப்புநிற அலமாரிக்குள் போய் அமைதியாக ஒரு பெக். கழிநீர்த்தொட்டியை அலம்பி பலகையின்மேல் வைக்கிறேன். அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள். வீரசிவாஜி இன்னும் சமைத்துக்கொண்டுதான் இருக்கிறார். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

"ஓஹோஹோ! கடைசியில சாமிநாதன் சார் போயும்போயும் ஒரு அரைக்கிழத்தைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாரா!". "போய் முகத்துல ஒரு கை தண்ணியைத் தெளிச்சு அலம்பிட்டு வாங்க".

நாம் மறுபடியும் சமையலறைக்குப் போய் அமைதியாகப் பலகையின்மேல் உட்காருகிறேன். அடுப்பு கூட பலகையின்மேல்தான் இருக்கிறது. வெளியறையிலிருந்து பாட்டில்கள் உருளும் சத்தம் கேட்கிறது. நான் எட்டிப்பார்க்கிறேன். அவள் கழிநீர்த்தொட்டியில் அமர்ந்து ஒரு பெக் அடித்துக்கொண்டிருக்கிறாள். இதுவரை எந்த அரைக்கிழமும் எதையும் பார்க்கவில்லை. ஏனென்றால் வீரசிவாஜி எப்போதும் கவனமாக இருப்பார். சாமிநாதன் சார் இன்னும் சமைத்துக்கொண்டு இருக்கிறார். நான் சுவற்றில் தொங்கி அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.

(பி.கு: சொந்தமா இப்படியெல்லாம் எழுத மூளை கிடையாது. இணையத்தில் உலவியதைச் சுட்டுத் தமிழில் தந்திருக்கிறேன். மேல்kindஐ எந்தவிதத்திலும் தாக்கும் எண்ணமில்லை. நாங்கள் எவ்வளவு அப்பாவிகள் என்பதை உணர்த்தவே இந்தப்பதிவு :-))))

Tuesday, November 23, 2004

மேல்Kind சர்வே 1 - பாகம் ஒன்று

"அனுபவம் ஒரு கண்டிப்பான ஆசான்" என்று சொல்வார்கள். அதாவது, அது பரீட்சையை முதலில் வைத்து விட்டு, பிறகு தான் பாடங்களைக் கற்றுத் தருமாம். வாழ்க்கை என்ற அனுபவமும் இப்படிப்பட்ட கண்டிப்பான ஆசான் தான்.

ஆனாலும், மேல்Kind குழுமம் இருக்கும் வரை யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏற்கெனவே பரீட்சை எழுதியவர்களிடமிருந்து கேள்விகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் 'பிட்டு' தயாரித்து அளிப்பதிலே எங்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் அளப்பரியது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு துவங்கப்பட்டது தான் மேல்Kind சர்வே என்ற இந்தப் புத்தம் புதிய பகுதி.

இணையத் தமிழ் நெஞ்சங்களிடம் அவ்வப்போது சில அவசியமான, சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அவர்களின் பதில்களை வாங்கித் தொகுத்து இங்கு அனைவரும் பயன்பெறும் வகையில் வெளியிடுவதே மேல்Kind சர்வே பகுதியின் முதன்மையான நோக்கம் ஆகும். (கேள்விகள் அனைத்தும், எங்கள் வலைப்பதிவின் நோக்கமான பேச்சுலர்கள் நலனை முன்னிறுத்தியே இருக்கும்.) இந்த யோசனையைச் செயல்படுத்த முனைந்த போது இணையத் தமிழர்கள் பரவலான அளவில் எங்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்று நம்பினோம். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. முதல் கேள்விக்கு வலைப் பிரபலங்கள் பலரும் எங்களுக்கு சுவையான பதில்களை அனுப்பி வைத்துள்ளார்கள். இரு பாகங்களாக வெளிவரும் முதல் சர்வேயின் பதில்களை வெளியிடுவதில் மகிழ்கிறோம். நாங்கள் கேட்டவுடன் பதில்களை அனுப்பிய அனைவருக்கும் எங்கள் நன்றிகள். எங்களை உற்சாகப்படுத்திய பிறருக்கும் எங்கள் நன்றிகள்.

-o0o-

சர்வே 1: உன்னை முதன்முதலாகப் பார்த்த போது...

பாகம் ஒன்று

முதல் சர்வே-க்கு எந்தக் கேள்வியை முன்வைக்கலாம் என்று சிந்தித்த போது, திருமணம் என்ற பந்தத்தின் ஒரு அம்சத்தைப் பற்றிக் கேட்க நினைத்து கீழ்வரும் கேள்வியை இணையத் தமிழர்களிடயே திருமணமான ஆண்களிடம் முன் வைத்தோம்:

1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?
கவித்துவமான ஒரு நிகழ்வைப் பற்றிய இந்தக் கேள்வி, சிறப்பான பதில்களைப் பெற்றுத் தரும் என்று நம்பினோம். அதன்படியே சிறந்த பதில்கள் கிடைத்தன. அவை இங்கே:

-o0o-

பா.ராகவன்

என்னுடையது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்தேன். அவளையேதான் மணந்தேன். முதலில் அவளை அவளது சுற்றத்தார் சூழப் பார்த்தபோது, எனக்குத் தோன்றிய உணர்ச்சி பரிதாபம். நல்ல பெண்ணாகத் தெரிகிறாளே, நம்மைத் திருமணம் செய்துகொண்டால் என்னென்ன அவஸ்தைகள் படுவாளோ என்று நினைத்தேன். அனுமதி பெற்று ஐந்து நிமிடங்கள் தனியே பேசியபோதும் அதையே தான் குறிப்பிட்டேன். 16 மணிநேரங்கள் வேலை இருக்கும். நான்கு மணிநேரங்கள் தூங்கிவிடுவேன். மிச்சமுள்ள நேரத்தில்தான் ஜனநாயகக் கடமையாற்ற முடியும்; பரவாயில்லையா என்று கேட்டேன். பாக்கு போடுவேன்; வேறு நல்ல பழக்கங்கள் கிடையாது என்பதையும் அப்போதே சொன்னேன். புரிந்ததோ, புரியவில்லையோ. ஒருமாதிரி தலையாட்டினாள். முன்னதாக கல்கியில் என்னுடைய சினிமா விமரிசனங்களைப் படித்து மிகவும் ரசித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தேன். எப்படியும் நிறைய சினிமாக்கள் பார்க்கலாம் என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. ஆனால் நான் திருமணம் ஆன உடனேயே படம் பார்த்து விமரிசனம் எழுதும் பணியைத் தலைமுழுகிவிட்டேன். (கடைசியாக நாங்கள் பார்த்தபடம் முகவரி. நான்கு வருடங்களுக்கு முன்னர் என்று ஞாபகம்.) ஒரு முழுநேரப் பத்திரிகையாளன் - எழுத்தாளனைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால் என்னென்ன சங்கடங்கள் இருக்கும் என்பதை நன்கு அறிந்தே அவள் என்னை மணக்க முன்வந்தாள். ஆகவே நெருடல்கள் ஏதுமில்லாமல் போகிறது.

-o0o-

ஆசிஃப் மீரான்

எங்க அம்மணியை நான் முதன் முதலாகச் சந்தித்தது சென்னையில்தான். கல்லூரியில் கட்டிடிக்கலையியல் முடித்து விட்டு நெல்லையில் கொஞ்ச காலம் குப்பை கொட்டி விட்டு சென்னைக்கு கிறித்தவ தேவாலயம் ஒன்றின் விரிவாக்கப்பணிக்காக வந்திருந்தபோதுதான் அண்ணா நகரில் வைத்து என் மனையாளை முதன் முதலில் பார்த்தேன்.

முதன் முதலாக அவளை நான் சரியாகவே பார்க்கவில்லை. முதல் பார்வையில் ஒழுங்காகப் பார்த்திருந்தால் இன்றைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்காதோ என்னமோ?! :-)

அடுத்த நாள் கான்க்ரீட் தூண்களுக்கு நீர் நனைத்துக் கொண்டிருந்தபோது என்னைக் கடந்து போனவளை மறுபடியும் முதன்முதலாகப் பார்த்தேன். இதை முதல் பார்வையாக எடுத்துக் கொண்டால், தலை நிமிராமல் நடந்து சென்ற அந்தப் பெண் என்னை இப்படி தரையில் விழவைப்பாள் என்று அப்போது நினைத்திருக்கவில்லை. மிக நாகரிகமாக உடையணிந்திருந்த அந்தப் பெண் தோழியர்களோடு நடந்து வந்து கொண்டிருந்தபோடும், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மெனமையாகப் புன்னகைத்தவாறே நடந்து வந்தது எனக்குள் அவளைப் பற்றிய கண்ணியமான உணர்வைத்தான் ஏற்படுத்தியது. அதன் பிறகும் பலமுறை அதே இடத்தில் பலமுறை அவளை நான் பார்த்திருந்தாலும் எங்களுக்குள் அறிமுகம் அறிமுகம் நடப்பதற்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது நான் அவளைப் பார்க்க நேரும்போதெல்லாம் அதே கண்ணியமான உணர்வு மேலோங்கவே செய்தது.

பிறகு ஆறு மாதத்திற்குப் பின் அறிமுகமானதும், அதன் பின் நண்பர்களாக சந்தித்துக் கொண்டதும், நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்ததில் அவள் மீது என் பிரியம் அதிகமாகி திருமணம் செய்து கொள்ளும் எனது ஆசையை வெளிப்படுத்தியதும் எல்லாமாக நான்கு ஆண்டுகள் கடந்து போனதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். அதற்குப் பின்னர் இறையருளால் இப்போது இரண்டு குழந்தைகள். திருமணம் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. "ஏன் தான் உன்னைச் சந்தித்தேனோ?" என்று அடிக்கடி அவளைச் சீண்டிக் கொண்டிருந்தாலும் அந்த முதல் பார்வை இன்னமும் மனதுக்குள் மழைச்சாரலின் ஈரமாய் தங்கி நிற்கிறது.


-o0o-

'மூக்கு' சுந்தர்

"கல்யாணம் பண்ணிக்க வஸந்த்" என்று சொல்கிற கணேஷிடம், "ஒரு கேக் சாப்பிடணும்கிறதுக்காக, பேக்கரியையே வாங்க முடியுமா பாஸ்" என்பான் வஸந்த். ஆனால் கடைசியில் எல்லோரும் பேக்கரி வாங்கித்தான் ஆக வேண்டி இருக்கிறது. கேக் சாப்பிட நினைக்கிற ஆவலாதி கொஞ்சம் மட்டுப்படுகின்ற பொழுதில் பேக்கரி வாங்குவது நலம். ஏனெனில் பேக்கரி வாங்குவது கேக் சாப்பிட மட்டும் அல்ல.

என்ன குழப்புகிறேனா... விஷயத்திற்கு வருகிறேன்.

ஸ்கூல் இறுதியில் ஆரம்பித்த பட்டாம்பூச்சி பருவத்திலிருந்து, வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாய் கையில் நாலு காசு சம்பாதிக்கும் காலம் வரை என் கரையைக் கடந்த புயல்கள் அநேகம். சிலது முகத்தில் வந்து தடவியது, சிலது கையை முறுக்கி குப்புறத் தள்ளியது. சிலது புயலென்றே தெரியாமல் நான் ஒதுங்கினேன். சிலது உடம்பையே சுருட்டி, கடைசியில் என் பஞ்சு மனசை எடுத்து, அவைகளின் தக்ளியில் நூல் நூலாய் திரித்து விட்டுப் போனது. நொந்து நூலாய்ப் போன கடைசி இரண்டு வருட இன்னிங்ஸ் முடிவில், கொஞ்ச நாள் ஃபேன் காற்று கூட ஆகாது போயிற்று. அப்போதுதான் வீட்டில் உள்ள தொடர் வற்புறுத்தல்களுக்கு பிறகு, நூலை எங்காவது சேலையாக்க வேண்டுமென்றால், மாலை எடுப்பதே ஒரே வழி என்ற ஞானோதயம் வந்தது

டே எக்ஸ்பிரஸ்ஸில் நான், என் இரண்டு சகோதரிகள், சகோதரியின் குண்டுப் பையன் எல்லோரும் திருச்சிக்கு , அவள் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தோம். முன்னரே ஃபோட்டோவை பார்த்திருந்தேன். ஆனால் ஒரு ஐடியாவும் இல்லை. சரி போய் பேசிப் பார்க்கலாம் என்றொரு எண்ணம். ஆனால், போய்ப் பார்த்து, வேண்டாம் என்று சொல்லி, இன்னொரு இடம் பார்த்து.. அங்கு டிபன் சாப்பிட்டு.. பிறகு இன்னொரு இடம், என்ற ஐடியா எல்லாம் அறவே இல்லை. ஏனெனில் அது, என்னைப் பொருத்த வரையில் மிக அசிங்கம் என்று நினைத்திருந்தேன். போய் உட்கார்ந்து என் (இந்நாள்) மாமானாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். மாமியார் வந்து காஃபி கொடுத்தார்கள். என் கண்ணாடி ஏன் இவ்வளவு தடிமன் என்றார் மாமனார். பவர் அதிகம் என்று சொல்லி விட்டு, மெல்லிய கண்ணாடியாக மாற்றி கொள்ளப் போகிறேனாக்கும் என்றேன். யாரோ ஒரு பெண், சடாரென்று கூடத்துக்குள் நுழைந்தார். கைகளை குவித்து வணக்கம் சொல்லிவிட்டு, சுவரில் சாய்ந்தாற்போல் நின்றார். உடனே என் மாமனார், இதுதான் என் டாட்டர் என்றார். இதுதான் நீங்கள் பார்க்க வந்திருக்கிற பெண் என்று சொல்லி இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். ஏற்கனவே பார்த்த, பழகிய முகம் போல இருந்தாள். வெளிர் மஞ்சள் நிற காட்டன் சேலையில், பெரிய பெரிய வெளிர் பச்சை நிற கட்டங்கள் போட்ட சேலை. ஒற்றை மல்லிகைச் சரம். மேக்கப் அறவே இல்லை - பவுடர் கூட இல்லை. ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பாட்டை சுற்றி வெட்டி வைக்கப்படுவதற்காக உபயோகப்படும் பகட்டுக் காய்கறிகள் போல அல்லாமல், குழம்பு வைத்து வயிறார சாப்பிடும் நம் வீடுக் கொல்லை கத்தரிக்காய் போல இருந்தாள். (உயரத்தை சொல்லவில்லை பாஸ்...). ஏனோ முதன் முதலில் பார்த்த உடனேயே இவள் தான் "அவள்" என்று தோன்றி விட்டது.

பிறகென்னெ..கொஞ்ச நேரம் உட்கார்ந்து எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தாள். தன் வேலையைப் பற்றி சொன்னாள். நான் அடித்த அசட்டு
ஜோக்குகளுக்கு வாய் விட்டு சிரித்தாள். காலில் விழவில்லை. காஃபி கொடுக்கவில்லை. கொடுத்த கையோடு சினிமா நாயகிகள் போல "படக்"
என்று விழி மலர்த்தி பார்க்கவில்லை. நாணிக் கோணவில்லை. விவரிக்க இயலாத கமிபீரம் இருந்தது - இயல்பான அடக்கத்துடன்.

பிறகென்ன - வீட்டுக்கு திரும்பி வந்து, இன்னொரு ரவுண்டு சகோதரிகளிடமும், அம்மா அப்பாவிடமும் பேசிவிட்டு, இன்னொரு குழம்பு
குழம்பி, சென்னைக்கு போய் சொல்கிறேன் என்று வீட்டில் வாய்தா வாங்கிக் கொண்டு, பஸ் பயணம் எல்லாம் யோசித்து, பிறகு அவளைப் பார்த்தபோது இவள் தான் "அவள்" என்று சொன்ன என் உள்ளுணர்வை மதித்து, வீட்டுக்கு தொலைபேசி "சரி" என்றேன்.

குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா...

(என்ன பசங்களா... ஊட்ல பொண்ணு பாக்கிறாங்களா... மேல்Kind-க்கு article கேக்கிற சாக்கில் சீனியர்களின் அனுபவங்களை கேட்கிறீங்களா...?? என்சாய் ராசா... சட்டு புட்டு-னு முடிவு பண்ணிடுங்க... வாழ்த்துக்கள்....!!!)


-o0o-

பாஸ்டன் பாலாஜி

'கோபுரங்கள் சாய்வதில்லை' திரைப்படம் பலரையும் இளமையில் பாதித்திருக்கும். என்னையும் சம அளவில் பயமுறுத்தியும் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று பாட வைக்குமளவு யோசிக்கவும் வைத்த படம். வினு சக்ரவர்த்தி 'கட்டுறா தாலிய' என்று வீரப்பன் மீசையோடு உறும, மோகன், சுஹாசினியின் கழுத்தில் தாலியை கட்டுவார். இரண்டு மாதத்துக்கு ஃபேஷியலும் மூன்று வாரத்துக்கு பியூட்டி பார்லரும் சென்றால் கமலா காமேஷும் த்ரிஷா மாதிரி ஆகிப் போவார்; ஆனால், 'மெட்டியொலி' நிர்மலாவை என்னதான் முயன்றாலும் குணம் மாற்ற முடியாது என்பதை நெஞ்சின் ஓரத்தில் ஒட்டவைத்த கதை.
அப்பாடா... ஒரு வழியாக அரேஞ்ஜ்ட் மேரேஜுக்கு வக்காலத்து வாங்கியாச்சு.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் வரும் நான்காவது வியாழக்கிழமையை நன்றிவழங்குதல் (Thanksgiving) தினமாகக் கொண்டாடுவார்கள். அதற்காக இரண்டு நாள் விடுமுறை விட்டு, குடும்பத்தோடு கழித்து வருமாறு அறிவுரைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு நாள் குடும்பத்தோடு செலவிடுவதால், மீதமுள்ள 364 (அல்லது லீப் வருடங்களில் 365) நாட்களும், 'ஏன் நாம் நமது உறவினர்களுடன் வசிப்பதில்லை?' என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடிகிறது.

நான்தான் சுயேச்சையாக காலம் தள்ளுகிறேனே... பெற்றோர்களும் அருகில் இல்லையே... என யோசித்து தேங்ஸ்கிவிங்குக்கு முன்பும் பின்பும் நாலு நாள் விடுமுறை சேர்த்து இந்தியா சென்று வர திட்டமிட்டேன். அப்பொழுதுதான் என்னுடைய முதலும் கடைசியுமான முதல் மனைவியை முதன் முதலாக சந்தித்தேன்.

இந்தியா வருகிறேன் என்றவுடனேயே வீட்டில் இருந்து நிச்சயம் செய்யப் போகிற பெண்ணின் புகைப்படம் வந்தது. அமெரிக்காவின் பச்சை அட்டை அவசரங்கள், தனிமைப் புழுக்கங்கள் என்று பலவும் சேர்ந்த குழப்பமான மன்நிலையில்தான் அந்தப் படத்தை பார்த்தேன். புகைப்படங்களில் மூலம் என்னால் அதிகம் அறிந்து கொள்ள முடிவதில்லை. 'எங்க சின்ன ராசா' பாக்யராஜ் போல் 'கொண்டச் சேவல் கூவும் நேரம்' என்று டூயட்களிலும் இறங்கமுடிவதில்லை.

இவளோடு வாழ்நாள் முழுவதும் கழிக்க முடியுமா? என்னைக் கட்டுப்படுத்தி சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு விடுவாளா? நல்ல அம்மாவாக இருப்பாளா? சுவையாக சமைப்பாளா? எதற்கெடுத்தாலும் எரிந்து விழ மாட்டாளே? அர்த்தராத்திரியில் உலாவ என்னை அனுமதிப்பாளா? அமெரிக்கா பழகிக் கொள்வாளா? வேலைக்கு செல்ல முடியுமா? இசை பிடிக்குமா? என்ன ரசனைகள்? எது பிடிக்காது? திரைப்படங்கள் பார்ப்பாளா? மாமியாருடன் ஒத்துப் போவாளா? கார் ஓட்டத் தெரியுமா? இன்னும் இது போல் நிறையக் கேள்விகள்.
மனதுக்குள் தொடர்ந்து வரும் அறுபதாண்டுகால நிகழ்வுகளின் கேள்விக் குறிகள். அவைகளை நான் அவளுக்கும், அவள் எனக்கும் திருப்தி அளிக்குமாறு சிந்திப்போமா என்னும் வினாக்கள். எந்த நிகழ்வையும் அணுஅணுவாய் அலசும்போது எனக்குக் குழப்பமே விஞ்சி நிற்கிறது. எதிர் கருத்துக்களும், அவற்றின் எதிரெதிர் கருத்துக்களும், முடிவில்லாத வாக்குவாதங்களில் ஆழ்த்திக் கொள்கின்றன. அவசியமான கவலைகள் எது என்று முனைந்து யோசிப்பதில்லை. அதனால் தேவையற்ற சஞ்சலங்களை பிரித்துப் பார்க்கும் அன்னபட்சியாக முடிவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இளம்பெண்ணுக்கு ஏற்ற கணவனாக நான் இருப்பேனா என்னும் பயம் மேலே எழுந்தது. விதவிதமான வண்ணக் கனவுகளுடன் மணமுடிக்கப் போகிறவளின் ஆசைகளையும் எண்ணங்களையும் திருப்திபடுத்தவும் தூண்டிவிடவும் செய்யமுடிய வேண்டும். லட்சியங்களை அடைய தோள் கொடுக்காவிட்டாலும், தடைக்கல்லாக இருக்கக் கூடாது. ரொம்பவும் ஊக்குவித்து, கணவனுக்காக மட்டுமே படிப்பில்/வேலையில் மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கக் கூடாது.

அமெரிக்காவில் அணில்கள் அதிகம். காரில் வேகமாக செல்லும்போது திடீரென்று குறுக்கே அணில்கள் பாயும். இந்த விஷயத்தில் பூனைகள் எவ்வளவோ தேவலாம். ஒரே மூச்சில், சாலையின் அந்தப் புறத்தில் இருந்து இந்தப் புறத்துக்கு ஓட்டமாக பாய்ந்து விடும். அணில்கள் திருமணமாகாத மனங்களை ஒத்தது. நடு ரோடில் நிற்கும். இடது புறம் செல்ல குஞ்சுக்கால் எடுத்து வைக்கும். இரண்டு அடி நடை பயின்றவுடன், நின்று, மீண்டும் வந்த வழியே செல்ல எத்தனிக்கும். பிறகு, மீண்டும், அந்தப் பக்கமே வேகமாக ஓட்டமெடுக்கும். முக்கால் கடந்த நிலையில் நின்று மீண்டும் சிந்தனையைத் துவக்கும். என்னுடைய பெற்றோர் பூனை போன்றவர்கள். அணிலாக யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்த என்னை, ஒரே மூச்சில் நிச்சயதார்த்தம் செய்யப் போகிற பெண்ணை, 'பெண்பார்த்தலுக்கு' அழைத்துச் சென்றார்கள்.

பெற்றோர் முன்னிலையில் அதிகம் பேச இயலவில்லை. தொடர்ச்சியான தனிமை உரையாடலிலும் பெரும்பாலும் அழகில் லயித்திருந்ததில் மனது மயக்கமாகவே இருந்தது.

எனினும் அந்தக் கேள்வியை கேட்டேவிட்டேன்.
"தமிழ் புத்தகங்களும் பத்திரிகைகளும் படிப்பாயா? எந்த எழுத்துக்கள் உனக்கு ரொம்பப் பிடிக்கும்?"

அவளின் பதில் என்னுடைய எண்ணங்களில் பால் வார்த்தது.
"குமுதத்தில் ஓரிரண்டு துணுக்கு, விகடனில் கொஞ்சம் படம்... அவ்வளவுதான் படிப்பேன். ஆங்கில நாவல்கள்தான் ரொம்பப் பிடிக்கும்!"

அப்பாடா... என்னுடைய கதைகளைப் படித்துவிட்டு 'என்ன குப்பையெல்லாம் எழுதறே நீ...' என்று உதாசீனப்படுத்தாமல், 'பெரிய்ய எழுத்தாளர் போல இருக்கு!' என ஆச்சரியத்தில் மூழ்கி விடுவாள் என நம்பிக்கை பிறந்தது.

ஆனால், எல்லா நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைதான் என்பது போல், திருமணமான ஆறு மாதத்தில் சி++, ஜாவா புத்தகங்கள் எதுவும் படிக்காமல், நான் வாங்கி தூசி படியவிட்டுக் கொண்டிருந்த புதுமைபித்தன் ஆரம்பித்து நரசய்யா வரை படித்து முடித்துவிட்டு, என்னுடைய கதைகளுக்கும் அவள் மோஹினியாக, பஸ்மாசுரத்தனம் செய்வது தனிக்கதை.

இன்னும் நிறைய கேள்வி கேட்டேன். நண்பர்களிடம் இருந்து வினாப்பட்டியல் தொகுத்து, அறிவுபூர்வமாக எண்ண விரும்பி, உளவியல் ரீதியில் அலச நினைத்தேன். ஆனால், 'உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?' என்பதற்கு இன்று தோன்றும் ஒற்றை வார்த்தை: மயக்கம்.

அந்த 'மயக்கம்' இல்லாவிட்டால் நான் அவளுக்கு தேர்ந்தவன்தான் என்று தோன்றியிருக்காது!


(தொடரும்.)

Friday, November 05, 2004

விருந்தினர் பதிவு: ரஜினி ராம்கி - 1

(நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேல்Kind-க்கு சில மேட்டர்கள் வழங்கிய ரஜினி ராம்கிக்கு எங்கள் நன்றி.)

கவிதை:
என்னமோ.. என்னமோ.. பிடிச்சிருக்கு

அவள்
தயங்கித் தயங்கி
அருகில் வந்து
கண்கள் தாழ்த்தி
மெல்லிய குரலில்
கிசுகிசுத்தாள் -
"உன்னை
என் ஜிம்மிக்கு
ரொம்பப் பிடிச்சிருக்கு."

-o0o-

புலம்பல் பொன்னுச்சாமியின் புலம்பல்:

"ஒரு ரூபா சைஸ் பொட்டு வைத்து தழைய தழைய பட்டுப்புடவை கட்டி குனிந்த தலை நிமிராமல் ஒரு மெலடியை எடுத்து வுட்ட படியே நடந்து வரும் சினிமா சுமங்கலியை நேர்ல பார்க்கவே முடியாதோ?"


-o0o-

மேல்Kind வலைப்பதிவின் கொள்கைகளுக்கு (??) ஏற்ற விருந்தினர் பதிவுகளை வரவேற்கிறோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: m_meenaks@yahoo.com