Tuesday, November 23, 2004

மேல்Kind சர்வே 1 - பாகம் ஒன்று

"அனுபவம் ஒரு கண்டிப்பான ஆசான்" என்று சொல்வார்கள். அதாவது, அது பரீட்சையை முதலில் வைத்து விட்டு, பிறகு தான் பாடங்களைக் கற்றுத் தருமாம். வாழ்க்கை என்ற அனுபவமும் இப்படிப்பட்ட கண்டிப்பான ஆசான் தான்.

ஆனாலும், மேல்Kind குழுமம் இருக்கும் வரை யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏற்கெனவே பரீட்சை எழுதியவர்களிடமிருந்து கேள்விகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் 'பிட்டு' தயாரித்து அளிப்பதிலே எங்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் அளப்பரியது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு துவங்கப்பட்டது தான் மேல்Kind சர்வே என்ற இந்தப் புத்தம் புதிய பகுதி.

இணையத் தமிழ் நெஞ்சங்களிடம் அவ்வப்போது சில அவசியமான, சுவாரஸ்யமான கேள்விகளை முன் வைத்து அவர்களின் பதில்களை வாங்கித் தொகுத்து இங்கு அனைவரும் பயன்பெறும் வகையில் வெளியிடுவதே மேல்Kind சர்வே பகுதியின் முதன்மையான நோக்கம் ஆகும். (கேள்விகள் அனைத்தும், எங்கள் வலைப்பதிவின் நோக்கமான பேச்சுலர்கள் நலனை முன்னிறுத்தியே இருக்கும்.) இந்த யோசனையைச் செயல்படுத்த முனைந்த போது இணையத் தமிழர்கள் பரவலான அளவில் எங்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்று நம்பினோம். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. முதல் கேள்விக்கு வலைப் பிரபலங்கள் பலரும் எங்களுக்கு சுவையான பதில்களை அனுப்பி வைத்துள்ளார்கள். இரு பாகங்களாக வெளிவரும் முதல் சர்வேயின் பதில்களை வெளியிடுவதில் மகிழ்கிறோம். நாங்கள் கேட்டவுடன் பதில்களை அனுப்பிய அனைவருக்கும் எங்கள் நன்றிகள். எங்களை உற்சாகப்படுத்திய பிறருக்கும் எங்கள் நன்றிகள்.

-o0o-

சர்வே 1: உன்னை முதன்முதலாகப் பார்த்த போது...

பாகம் ஒன்று

முதல் சர்வே-க்கு எந்தக் கேள்வியை முன்வைக்கலாம் என்று சிந்தித்த போது, திருமணம் என்ற பந்தத்தின் ஒரு அம்சத்தைப் பற்றிக் கேட்க நினைத்து கீழ்வரும் கேள்வியை இணையத் தமிழர்களிடயே திருமணமான ஆண்களிடம் முன் வைத்தோம்:

1. உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?
கவித்துவமான ஒரு நிகழ்வைப் பற்றிய இந்தக் கேள்வி, சிறப்பான பதில்களைப் பெற்றுத் தரும் என்று நம்பினோம். அதன்படியே சிறந்த பதில்கள் கிடைத்தன. அவை இங்கே:

-o0o-

பா.ராகவன்

என்னுடையது, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்தேன். அவளையேதான் மணந்தேன். முதலில் அவளை அவளது சுற்றத்தார் சூழப் பார்த்தபோது, எனக்குத் தோன்றிய உணர்ச்சி பரிதாபம். நல்ல பெண்ணாகத் தெரிகிறாளே, நம்மைத் திருமணம் செய்துகொண்டால் என்னென்ன அவஸ்தைகள் படுவாளோ என்று நினைத்தேன். அனுமதி பெற்று ஐந்து நிமிடங்கள் தனியே பேசியபோதும் அதையே தான் குறிப்பிட்டேன். 16 மணிநேரங்கள் வேலை இருக்கும். நான்கு மணிநேரங்கள் தூங்கிவிடுவேன். மிச்சமுள்ள நேரத்தில்தான் ஜனநாயகக் கடமையாற்ற முடியும்; பரவாயில்லையா என்று கேட்டேன். பாக்கு போடுவேன்; வேறு நல்ல பழக்கங்கள் கிடையாது என்பதையும் அப்போதே சொன்னேன். புரிந்ததோ, புரியவில்லையோ. ஒருமாதிரி தலையாட்டினாள். முன்னதாக கல்கியில் என்னுடைய சினிமா விமரிசனங்களைப் படித்து மிகவும் ரசித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தேன். எப்படியும் நிறைய சினிமாக்கள் பார்க்கலாம் என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. ஆனால் நான் திருமணம் ஆன உடனேயே படம் பார்த்து விமரிசனம் எழுதும் பணியைத் தலைமுழுகிவிட்டேன். (கடைசியாக நாங்கள் பார்த்தபடம் முகவரி. நான்கு வருடங்களுக்கு முன்னர் என்று ஞாபகம்.) ஒரு முழுநேரப் பத்திரிகையாளன் - எழுத்தாளனைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால் என்னென்ன சங்கடங்கள் இருக்கும் என்பதை நன்கு அறிந்தே அவள் என்னை மணக்க முன்வந்தாள். ஆகவே நெருடல்கள் ஏதுமில்லாமல் போகிறது.

-o0o-

ஆசிஃப் மீரான்

எங்க அம்மணியை நான் முதன் முதலாகச் சந்தித்தது சென்னையில்தான். கல்லூரியில் கட்டிடிக்கலையியல் முடித்து விட்டு நெல்லையில் கொஞ்ச காலம் குப்பை கொட்டி விட்டு சென்னைக்கு கிறித்தவ தேவாலயம் ஒன்றின் விரிவாக்கப்பணிக்காக வந்திருந்தபோதுதான் அண்ணா நகரில் வைத்து என் மனையாளை முதன் முதலில் பார்த்தேன்.

முதன் முதலாக அவளை நான் சரியாகவே பார்க்கவில்லை. முதல் பார்வையில் ஒழுங்காகப் பார்த்திருந்தால் இன்றைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்காதோ என்னமோ?! :-)

அடுத்த நாள் கான்க்ரீட் தூண்களுக்கு நீர் நனைத்துக் கொண்டிருந்தபோது என்னைக் கடந்து போனவளை மறுபடியும் முதன்முதலாகப் பார்த்தேன். இதை முதல் பார்வையாக எடுத்துக் கொண்டால், தலை நிமிராமல் நடந்து சென்ற அந்தப் பெண் என்னை இப்படி தரையில் விழவைப்பாள் என்று அப்போது நினைத்திருக்கவில்லை. மிக நாகரிகமாக உடையணிந்திருந்த அந்தப் பெண் தோழியர்களோடு நடந்து வந்து கொண்டிருந்தபோடும், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மெனமையாகப் புன்னகைத்தவாறே நடந்து வந்தது எனக்குள் அவளைப் பற்றிய கண்ணியமான உணர்வைத்தான் ஏற்படுத்தியது. அதன் பிறகும் பலமுறை அதே இடத்தில் பலமுறை அவளை நான் பார்த்திருந்தாலும் எங்களுக்குள் அறிமுகம் அறிமுகம் நடப்பதற்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது நான் அவளைப் பார்க்க நேரும்போதெல்லாம் அதே கண்ணியமான உணர்வு மேலோங்கவே செய்தது.

பிறகு ஆறு மாதத்திற்குப் பின் அறிமுகமானதும், அதன் பின் நண்பர்களாக சந்தித்துக் கொண்டதும், நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்ததில் அவள் மீது என் பிரியம் அதிகமாகி திருமணம் செய்து கொள்ளும் எனது ஆசையை வெளிப்படுத்தியதும் எல்லாமாக நான்கு ஆண்டுகள் கடந்து போனதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். அதற்குப் பின்னர் இறையருளால் இப்போது இரண்டு குழந்தைகள். திருமணம் முடிந்து பத்தாண்டுகளாகி விட்டன. "ஏன் தான் உன்னைச் சந்தித்தேனோ?" என்று அடிக்கடி அவளைச் சீண்டிக் கொண்டிருந்தாலும் அந்த முதல் பார்வை இன்னமும் மனதுக்குள் மழைச்சாரலின் ஈரமாய் தங்கி நிற்கிறது.


-o0o-

'மூக்கு' சுந்தர்

"கல்யாணம் பண்ணிக்க வஸந்த்" என்று சொல்கிற கணேஷிடம், "ஒரு கேக் சாப்பிடணும்கிறதுக்காக, பேக்கரியையே வாங்க முடியுமா பாஸ்" என்பான் வஸந்த். ஆனால் கடைசியில் எல்லோரும் பேக்கரி வாங்கித்தான் ஆக வேண்டி இருக்கிறது. கேக் சாப்பிட நினைக்கிற ஆவலாதி கொஞ்சம் மட்டுப்படுகின்ற பொழுதில் பேக்கரி வாங்குவது நலம். ஏனெனில் பேக்கரி வாங்குவது கேக் சாப்பிட மட்டும் அல்ல.

என்ன குழப்புகிறேனா... விஷயத்திற்கு வருகிறேன்.

ஸ்கூல் இறுதியில் ஆரம்பித்த பட்டாம்பூச்சி பருவத்திலிருந்து, வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாய் கையில் நாலு காசு சம்பாதிக்கும் காலம் வரை என் கரையைக் கடந்த புயல்கள் அநேகம். சிலது முகத்தில் வந்து தடவியது, சிலது கையை முறுக்கி குப்புறத் தள்ளியது. சிலது புயலென்றே தெரியாமல் நான் ஒதுங்கினேன். சிலது உடம்பையே சுருட்டி, கடைசியில் என் பஞ்சு மனசை எடுத்து, அவைகளின் தக்ளியில் நூல் நூலாய் திரித்து விட்டுப் போனது. நொந்து நூலாய்ப் போன கடைசி இரண்டு வருட இன்னிங்ஸ் முடிவில், கொஞ்ச நாள் ஃபேன் காற்று கூட ஆகாது போயிற்று. அப்போதுதான் வீட்டில் உள்ள தொடர் வற்புறுத்தல்களுக்கு பிறகு, நூலை எங்காவது சேலையாக்க வேண்டுமென்றால், மாலை எடுப்பதே ஒரே வழி என்ற ஞானோதயம் வந்தது

டே எக்ஸ்பிரஸ்ஸில் நான், என் இரண்டு சகோதரிகள், சகோதரியின் குண்டுப் பையன் எல்லோரும் திருச்சிக்கு , அவள் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தோம். முன்னரே ஃபோட்டோவை பார்த்திருந்தேன். ஆனால் ஒரு ஐடியாவும் இல்லை. சரி போய் பேசிப் பார்க்கலாம் என்றொரு எண்ணம். ஆனால், போய்ப் பார்த்து, வேண்டாம் என்று சொல்லி, இன்னொரு இடம் பார்த்து.. அங்கு டிபன் சாப்பிட்டு.. பிறகு இன்னொரு இடம், என்ற ஐடியா எல்லாம் அறவே இல்லை. ஏனெனில் அது, என்னைப் பொருத்த வரையில் மிக அசிங்கம் என்று நினைத்திருந்தேன். போய் உட்கார்ந்து என் (இந்நாள்) மாமானாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். மாமியார் வந்து காஃபி கொடுத்தார்கள். என் கண்ணாடி ஏன் இவ்வளவு தடிமன் என்றார் மாமனார். பவர் அதிகம் என்று சொல்லி விட்டு, மெல்லிய கண்ணாடியாக மாற்றி கொள்ளப் போகிறேனாக்கும் என்றேன். யாரோ ஒரு பெண், சடாரென்று கூடத்துக்குள் நுழைந்தார். கைகளை குவித்து வணக்கம் சொல்லிவிட்டு, சுவரில் சாய்ந்தாற்போல் நின்றார். உடனே என் மாமனார், இதுதான் என் டாட்டர் என்றார். இதுதான் நீங்கள் பார்க்க வந்திருக்கிற பெண் என்று சொல்லி இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். ஏற்கனவே பார்த்த, பழகிய முகம் போல இருந்தாள். வெளிர் மஞ்சள் நிற காட்டன் சேலையில், பெரிய பெரிய வெளிர் பச்சை நிற கட்டங்கள் போட்ட சேலை. ஒற்றை மல்லிகைச் சரம். மேக்கப் அறவே இல்லை - பவுடர் கூட இல்லை. ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பாட்டை சுற்றி வெட்டி வைக்கப்படுவதற்காக உபயோகப்படும் பகட்டுக் காய்கறிகள் போல அல்லாமல், குழம்பு வைத்து வயிறார சாப்பிடும் நம் வீடுக் கொல்லை கத்தரிக்காய் போல இருந்தாள். (உயரத்தை சொல்லவில்லை பாஸ்...). ஏனோ முதன் முதலில் பார்த்த உடனேயே இவள் தான் "அவள்" என்று தோன்றி விட்டது.

பிறகென்னெ..கொஞ்ச நேரம் உட்கார்ந்து எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தாள். தன் வேலையைப் பற்றி சொன்னாள். நான் அடித்த அசட்டு
ஜோக்குகளுக்கு வாய் விட்டு சிரித்தாள். காலில் விழவில்லை. காஃபி கொடுக்கவில்லை. கொடுத்த கையோடு சினிமா நாயகிகள் போல "படக்"
என்று விழி மலர்த்தி பார்க்கவில்லை. நாணிக் கோணவில்லை. விவரிக்க இயலாத கமிபீரம் இருந்தது - இயல்பான அடக்கத்துடன்.

பிறகென்ன - வீட்டுக்கு திரும்பி வந்து, இன்னொரு ரவுண்டு சகோதரிகளிடமும், அம்மா அப்பாவிடமும் பேசிவிட்டு, இன்னொரு குழம்பு
குழம்பி, சென்னைக்கு போய் சொல்கிறேன் என்று வீட்டில் வாய்தா வாங்கிக் கொண்டு, பஸ் பயணம் எல்லாம் யோசித்து, பிறகு அவளைப் பார்த்தபோது இவள் தான் "அவள்" என்று சொன்ன என் உள்ளுணர்வை மதித்து, வீட்டுக்கு தொலைபேசி "சரி" என்றேன்.

குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா...

(என்ன பசங்களா... ஊட்ல பொண்ணு பாக்கிறாங்களா... மேல்Kind-க்கு article கேக்கிற சாக்கில் சீனியர்களின் அனுபவங்களை கேட்கிறீங்களா...?? என்சாய் ராசா... சட்டு புட்டு-னு முடிவு பண்ணிடுங்க... வாழ்த்துக்கள்....!!!)


-o0o-

பாஸ்டன் பாலாஜி

'கோபுரங்கள் சாய்வதில்லை' திரைப்படம் பலரையும் இளமையில் பாதித்திருக்கும். என்னையும் சம அளவில் பயமுறுத்தியும் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று பாட வைக்குமளவு யோசிக்கவும் வைத்த படம். வினு சக்ரவர்த்தி 'கட்டுறா தாலிய' என்று வீரப்பன் மீசையோடு உறும, மோகன், சுஹாசினியின் கழுத்தில் தாலியை கட்டுவார். இரண்டு மாதத்துக்கு ஃபேஷியலும் மூன்று வாரத்துக்கு பியூட்டி பார்லரும் சென்றால் கமலா காமேஷும் த்ரிஷா மாதிரி ஆகிப் போவார்; ஆனால், 'மெட்டியொலி' நிர்மலாவை என்னதான் முயன்றாலும் குணம் மாற்ற முடியாது என்பதை நெஞ்சின் ஓரத்தில் ஒட்டவைத்த கதை.
அப்பாடா... ஒரு வழியாக அரேஞ்ஜ்ட் மேரேஜுக்கு வக்காலத்து வாங்கியாச்சு.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் வரும் நான்காவது வியாழக்கிழமையை நன்றிவழங்குதல் (Thanksgiving) தினமாகக் கொண்டாடுவார்கள். அதற்காக இரண்டு நாள் விடுமுறை விட்டு, குடும்பத்தோடு கழித்து வருமாறு அறிவுரைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு நாள் குடும்பத்தோடு செலவிடுவதால், மீதமுள்ள 364 (அல்லது லீப் வருடங்களில் 365) நாட்களும், 'ஏன் நாம் நமது உறவினர்களுடன் வசிப்பதில்லை?' என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடிகிறது.

நான்தான் சுயேச்சையாக காலம் தள்ளுகிறேனே... பெற்றோர்களும் அருகில் இல்லையே... என யோசித்து தேங்ஸ்கிவிங்குக்கு முன்பும் பின்பும் நாலு நாள் விடுமுறை சேர்த்து இந்தியா சென்று வர திட்டமிட்டேன். அப்பொழுதுதான் என்னுடைய முதலும் கடைசியுமான முதல் மனைவியை முதன் முதலாக சந்தித்தேன்.

இந்தியா வருகிறேன் என்றவுடனேயே வீட்டில் இருந்து நிச்சயம் செய்யப் போகிற பெண்ணின் புகைப்படம் வந்தது. அமெரிக்காவின் பச்சை அட்டை அவசரங்கள், தனிமைப் புழுக்கங்கள் என்று பலவும் சேர்ந்த குழப்பமான மன்நிலையில்தான் அந்தப் படத்தை பார்த்தேன். புகைப்படங்களில் மூலம் என்னால் அதிகம் அறிந்து கொள்ள முடிவதில்லை. 'எங்க சின்ன ராசா' பாக்யராஜ் போல் 'கொண்டச் சேவல் கூவும் நேரம்' என்று டூயட்களிலும் இறங்கமுடிவதில்லை.

இவளோடு வாழ்நாள் முழுவதும் கழிக்க முடியுமா? என்னைக் கட்டுப்படுத்தி சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு விடுவாளா? நல்ல அம்மாவாக இருப்பாளா? சுவையாக சமைப்பாளா? எதற்கெடுத்தாலும் எரிந்து விழ மாட்டாளே? அர்த்தராத்திரியில் உலாவ என்னை அனுமதிப்பாளா? அமெரிக்கா பழகிக் கொள்வாளா? வேலைக்கு செல்ல முடியுமா? இசை பிடிக்குமா? என்ன ரசனைகள்? எது பிடிக்காது? திரைப்படங்கள் பார்ப்பாளா? மாமியாருடன் ஒத்துப் போவாளா? கார் ஓட்டத் தெரியுமா? இன்னும் இது போல் நிறையக் கேள்விகள்.
மனதுக்குள் தொடர்ந்து வரும் அறுபதாண்டுகால நிகழ்வுகளின் கேள்விக் குறிகள். அவைகளை நான் அவளுக்கும், அவள் எனக்கும் திருப்தி அளிக்குமாறு சிந்திப்போமா என்னும் வினாக்கள். எந்த நிகழ்வையும் அணுஅணுவாய் அலசும்போது எனக்குக் குழப்பமே விஞ்சி நிற்கிறது. எதிர் கருத்துக்களும், அவற்றின் எதிரெதிர் கருத்துக்களும், முடிவில்லாத வாக்குவாதங்களில் ஆழ்த்திக் கொள்கின்றன. அவசியமான கவலைகள் எது என்று முனைந்து யோசிப்பதில்லை. அதனால் தேவையற்ற சஞ்சலங்களை பிரித்துப் பார்க்கும் அன்னபட்சியாக முடிவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இளம்பெண்ணுக்கு ஏற்ற கணவனாக நான் இருப்பேனா என்னும் பயம் மேலே எழுந்தது. விதவிதமான வண்ணக் கனவுகளுடன் மணமுடிக்கப் போகிறவளின் ஆசைகளையும் எண்ணங்களையும் திருப்திபடுத்தவும் தூண்டிவிடவும் செய்யமுடிய வேண்டும். லட்சியங்களை அடைய தோள் கொடுக்காவிட்டாலும், தடைக்கல்லாக இருக்கக் கூடாது. ரொம்பவும் ஊக்குவித்து, கணவனுக்காக மட்டுமே படிப்பில்/வேலையில் மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கக் கூடாது.

அமெரிக்காவில் அணில்கள் அதிகம். காரில் வேகமாக செல்லும்போது திடீரென்று குறுக்கே அணில்கள் பாயும். இந்த விஷயத்தில் பூனைகள் எவ்வளவோ தேவலாம். ஒரே மூச்சில், சாலையின் அந்தப் புறத்தில் இருந்து இந்தப் புறத்துக்கு ஓட்டமாக பாய்ந்து விடும். அணில்கள் திருமணமாகாத மனங்களை ஒத்தது. நடு ரோடில் நிற்கும். இடது புறம் செல்ல குஞ்சுக்கால் எடுத்து வைக்கும். இரண்டு அடி நடை பயின்றவுடன், நின்று, மீண்டும் வந்த வழியே செல்ல எத்தனிக்கும். பிறகு, மீண்டும், அந்தப் பக்கமே வேகமாக ஓட்டமெடுக்கும். முக்கால் கடந்த நிலையில் நின்று மீண்டும் சிந்தனையைத் துவக்கும். என்னுடைய பெற்றோர் பூனை போன்றவர்கள். அணிலாக யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்த என்னை, ஒரே மூச்சில் நிச்சயதார்த்தம் செய்யப் போகிற பெண்ணை, 'பெண்பார்த்தலுக்கு' அழைத்துச் சென்றார்கள்.

பெற்றோர் முன்னிலையில் அதிகம் பேச இயலவில்லை. தொடர்ச்சியான தனிமை உரையாடலிலும் பெரும்பாலும் அழகில் லயித்திருந்ததில் மனது மயக்கமாகவே இருந்தது.

எனினும் அந்தக் கேள்வியை கேட்டேவிட்டேன்.
"தமிழ் புத்தகங்களும் பத்திரிகைகளும் படிப்பாயா? எந்த எழுத்துக்கள் உனக்கு ரொம்பப் பிடிக்கும்?"

அவளின் பதில் என்னுடைய எண்ணங்களில் பால் வார்த்தது.
"குமுதத்தில் ஓரிரண்டு துணுக்கு, விகடனில் கொஞ்சம் படம்... அவ்வளவுதான் படிப்பேன். ஆங்கில நாவல்கள்தான் ரொம்பப் பிடிக்கும்!"

அப்பாடா... என்னுடைய கதைகளைப் படித்துவிட்டு 'என்ன குப்பையெல்லாம் எழுதறே நீ...' என்று உதாசீனப்படுத்தாமல், 'பெரிய்ய எழுத்தாளர் போல இருக்கு!' என ஆச்சரியத்தில் மூழ்கி விடுவாள் என நம்பிக்கை பிறந்தது.

ஆனால், எல்லா நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைதான் என்பது போல், திருமணமான ஆறு மாதத்தில் சி++, ஜாவா புத்தகங்கள் எதுவும் படிக்காமல், நான் வாங்கி தூசி படியவிட்டுக் கொண்டிருந்த புதுமைபித்தன் ஆரம்பித்து நரசய்யா வரை படித்து முடித்துவிட்டு, என்னுடைய கதைகளுக்கும் அவள் மோஹினியாக, பஸ்மாசுரத்தனம் செய்வது தனிக்கதை.

இன்னும் நிறைய கேள்வி கேட்டேன். நண்பர்களிடம் இருந்து வினாப்பட்டியல் தொகுத்து, அறிவுபூர்வமாக எண்ண விரும்பி, உளவியல் ரீதியில் அலச நினைத்தேன். ஆனால், 'உங்கள் துணைவியாரை நீங்கள் முதன்முதலாகப் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய கருத்து/எண்ணம் யாது?' என்பதற்கு இன்று தோன்றும் ஒற்றை வார்த்தை: மயக்கம்.

அந்த 'மயக்கம்' இல்லாவிட்டால் நான் அவளுக்கு தேர்ந்தவன்தான் என்று தோன்றியிருக்காது!


(தொடரும்.)

8 comments:

Anonymous said...

தம்பிகளா, இவிங்க பேச்ச நம்பாதீய. முகமூடி மாட்டி கேட்டுப்பாருங்க, வேற கத வரும்.
...

By: .....

ரவியா said...

//இரண்டு வருட இன்னிங்ஸ் முடிவில், கொஞ்ச நாள் ஃபேன் காற்று கூட ஆகாது போயிற்று.// என்னாபா சொல்லுர?

Anonymous said...

you should ask the spouses also to express their views :)

By: spousemouse

Mookku Sundar said...

ரவியா,

"சைட்" கூட அடிக்கப் பிடிக்கலைன்னு அர்த்தம்...

இன்னாபா இது..இன்னா வயசாச்சு உனக்கு..?? :-)

-மூக்கன்

உஷா மாமி,

இன்னாதான் முகமூடி போட்டாலும், இந்த விஷயத்தில் ஒயுங்கா சொல்லலையின்னா, மூஞ்சி கியிஞ்சிரும்...உங்களுக்குத் தெரியாததா..?? :-)

Anonymous said...

ஏண்டாப்பா,நா முகமூடி போட அளவு
பயந்தாங்கொள்ளியா என்ன? இல்ல அசிங்க்மா எதாவது எழுதினேனா?அப்புறம்..... இது சும்மா புனைபெயர் மாதிரி.
ஈ.மெயில் ஐடியும் கொடுத்திருக்கேனே?

By: ....

Mookku Sundar said...

அய்ய உங்களை சொல்லலை மாமி. அது நீங்கதான்னு எனக்குத் தெரியும். எங்களுக்கு முகமூடி போட்டு கெள்வி கேக்க சொன்னிங்களே. அதுக்கு பதில் சொன்னேன். தப்பு தப்பா புரிஞ்சிகாதீங்க...

Anonymous said...

மூக்கரே, வீட்டுல அனுமதி வாங்கிதான் பதில
போட்டீரோ :-))

By: ...

Mookku Sundar said...

ஹி..ஹி..இன்னமும் ஊட்ல தெரியாது மாமி.