காட்டு ராஜாவான சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது ஒரு அணில். சிங்கம் எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை பணிவோடு ஏற்று, சுறுசுறுப்பாக செய்து முடித்தது அந்த அணில்.
சிங்கத்துக்கு அந்த அணிலை ரொம்பவே பிடித்துப் போனது.
"உன் சேவையைப் பாராட்டி, நீ ஓய்வு பெறும்போது உனக்கு ஒரு வண்டி நிறைய பாதாம் கொட்டைகள் தருகிறேன்" என்று வாக்குறுதி கொடுத்தது சிங்கம்.
அணிலுக்குத் தாங்கமுடியாத சந்தோஷம். காட்டில் இருக்கும் பிற அணில்கள், தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு பாதாம்கொட்டையைச் சுவைத்திருந்தாலே பெரிய விஷயம். ஆனால், தனக்கு ஒரு வண்டி நிறைய கிடைக்க்ப் போகிறதே என்று பிரமித்தது அது.
அந்தக் கனவிலேயே அதன் ஒவ்வொரு நாளும் கழிந்தது. மற்ற அணில்கள் எல்லாம் மரங்களில் சுதந்திரமாக ஏறி விளையாடி, ஒவ்வொரு சீசனிலும் புதிது புதிதாக பழுக்கும் பழங்களையும் கொட்டைகளையும் சுவைத்துக் கொண்டிருக்க, அந்த அணில் மட்டும் ராஜாவின் கட்டளைகளை வேத வாக்காக ஏற்றுச் செய்து கொண்டிருந்தது.
ஆண்டுகள் ஓடின. அணிலுக்கு வயதாகி, நகரவே முடியாத ஒரு வேளை வந்தது. தான் ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டதை உணர்ந்த அது, சிங்கத்திடம் விஷயத்தைச் சொன்னது. சிங்கமும் அணிலுக்கு உரிய மரியாதை செய்து, ஒரு வண்டி நிறைய பாதாம்கொட்டைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தது.
தன் வீட்டுக்கு அதை எடுத்துப் போன பிறகுதான் அணிலுக்கு ஒரு விஷயம் உறைத்தது... முதுமையின் காரணமாக அதன் பற்கள் எல்லாம் விழுந்துவிட்டிருந்தன; அதனால் ஒரே ஒரு பாதாம்கொட்டையைக் கூட சுவைக்க முடியாது. எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் வாழ்க்கை முடிந்துவிட்டதே என அணில் வருந்தியது.
எப்போதோ கிடைக்கும் ஆதாயம், இன்றைய பசியைத் தீர்க்காது!
பணியக மின்னஞ்சலில் வந்த ஒரு குட்டிக்கதை...சொந்த சரக்கு இல்ல.
No comments:
Post a Comment