Monday, September 11, 2006

'பேச்சி'லர் சூர்யா


ஜோதிகா ரசிகர்களுக்கு தாடி ப்ராப்திரஸ்து. சூர்யா ரசிகர்கள் ஆனந்தமும் அடையக்கடவது. 'ஜோ' ரசிகர்கள் அடுத்த ஆண்டில் இருந்து அதிகப்படியாக ஒரு 'ராக்கி' வாங்கி கட்டிக்கொள்ளவும்.

பட வடிவமைப்பு/மேம்பாடு செய்துகொடுத்த என் பணியக கணிணி வரைகலை நிபுணர் முத்துவுக்கு ('பேச்சி'லர்தான்) நன்றி.

Friday, April 28, 2006

பதவி உயர்வு




பேச்சுலர்ப் பதவியிலலிருந்து பேச்சிலராகப் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது.... பதவி ஏற்பு ஏப்ரல் 30, 2006. மேல் விவரங்கள் பத்திரிக்கையில் உள்ளன.

மின்னஞ்சலில்/நேரில் அழைப்பைப் பெற விடுபட்டவர்கள் தயவுசெய்து இதையே அப்படிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும். சிலப்பலப் பணிகளால் விளைந்த நேரமின்மையின் காரணமாக மின்னஞ்சலில் அழைப்பிதழ் நிறைய பேருக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது. இந்த இயலாமையையும் என் நட்பு/அன்பையும் தயை கூர்ந்து தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருமணத்திற்கோ வரவேற்பு நிகழ்ச்சிக்கோ வந்தால் பெருமகிழ்ச்சியடைவேன். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் கூட வரலாம். ;-)

Thursday, April 20, 2006

திருமண அழைப்பிதழ்

பள்ளியில் படிக்கும்போது இது மாதிரி நிறைய 'பத்திரிக்கைகள்' படிச்சுதான் என் அறிவு வளர்ச்சி அடைஞ்சது. சமீபத்துல என் நண்பன் ஒர்த்தன் மின்னஞ்சல்ல அனுப்பி இருந்தான்.

Tuesday, February 07, 2006

ச்சாச்சுப்புட்டாங்ங...



ஆடிய ஆட்டமென்ன...
பேசிய வார்த்தையென்ன...
எழுதிய emailகளென்ன...
பதித்த blogகளென்ன...
என்ன என்ன என்ன....!!!!!

Thursday, February 02, 2006

தப்பித்த தவளைகள்

மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா அழைப்பு
------------------------------------

கூடிய சீக்கிரம் என்னை பலிகொடுக்கும் திருவிழா நடக்கவுள்ளதால், கழுத்து வெட்டும்முன் மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா, நிகழும் பார்த்திப ஆண்டு ·பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதுதான் எனக்கு முதல் நிச்சயதார்த்தம் என்பதால் எப்படி வரவேற்க வேண்டும் என்று தெரியவில்லை. பத்திரிக்கை ஏதும் நிச்சயதார்த்தத்திற்கென்று தனியாக அச்சடிக்காததால் இந்த மடலையே கவிதையாக, மன்னிக்கவும், பத்திரிக்கையாக நினைத்துக்கொள்ளவும்.

காந்தி லால் ஜெயின் திருமண மண்டபம்
கோடம்பாக்கம் ரோடு
மேற்கு சைதை
சென்னை

மேற்குறிப்பிட்ட வரிகள் நிச்சயம் கவிதை முயற்சி அல்ல என்பதையும், மஞ்சல்நீர்த் தெளிப்பு விழா (அதான், ஆட்டை வெட்டறதுக்கு முன்னாடி ஏதோ தெளிப்பாங்களாமே) நடக்கும் பலிபீடம்.... வந்து,திருமண மண்டபம்தான் என்றும் உறுதி கூறுகிறேன்.

மேலும், 4:00-5:30க்குள் நடக்கும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

தாங்கள் தங்கள் சுற்றமித்ர பந்துக்களுடன் புடைசூழ வந்திருந்து மரபுக்கவிதை வாசிக்கவேண்டுமாய்....இல்ல இல்ல, தப்பா சொல்லிட்டேன்... மரபுப்படி ஆசிர்வதிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
ஆடு (எ) sheep (எ) பக்ரா (எ) Krupa Shankar

*************************************************************************************

நிச்சயதார்த்த விழா அழைப்பு
=======================

('திருமண ஒப்பந்த விழா'ன்னு தமிழில சொல்லலாமா?)

வருகிற வெள்ளிக்கிழமை (03-02-2006) அன்று நடைபெற உள்ள எனது நிச்சயதார்த்த விழாவுக்கு நண்பர்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இடம்: அன்னப்ப ராஜா திருமண மண்டபம்,
·பாரஸ்ட் ரோடு, பங்களா மேடு, தேனி.

நாள்: 03-02-2006

நேரம்: மாலை ஐந்து மணி தொடங்கி ஆறு மணிக்குள்

உங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து எங்கள் இல்லறம் சிறக்க இருவரையும்
வாழ்த்தினால் மகிழ்வோம்.

திருமணம், வைகாசி மாதத்தில் (ஜுன் 2006) நடைபெறக் கூடும் என்று நம்பத்
தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமண நாள் உறுதி செய்யப்பட்டதும்
தெரிவிக்கிறேன். அதற்கும் இம்மடல் மூலம் ஒரு நிற்கும் அழைப்பு (standing
invitation!!) இருப்பதாகக் கருதிக் கொள்ளவும்.

உங்கள் ஆசிகளை எதிர்நோக்கும், -- மீனாக்ஸ் & சுபா

Monday, January 23, 2006

மேல்Kind ஈ-புக்

நிகழும் தாரண ஆண்டு ஃபிப்ரவரி பதினான்காம் தேதியாம் காதலர் நண்பர்கள் தினமாம் லவ்லெட்டர் மற்றும் ரூ. 395.95 சங்கமிக்கும் சுபயோக சுபதினத்தில் மேல்Kind ஹீ ஹீ ஹீ... ஈஈ ஈஈ ஈ-புக் ஒன்று வெளியாக இருக்கிறது. பேச்சுலர்களும் பேச்சிலர்களும் தங்கள் படைப்புகளை மேல்Kindக்கு meenakshisankar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தால் E-bookஇல் சேர்க்க ஏதுவாக இருக்கும்.


படைப்பாளிகளுக்கான நிபந்தனைகள்

  1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் மட்டுமே ஒரு நபர் அனுப்பி வைக்கலாம். ஒன்றுக்கும் குறைவான படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.


  2. படைப்பு எந்த விஷயத்தைப் பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம். எனினும், தந்தைக்குலம் சந்திக்கும் சமூக, அரசியல் ரீதியான ப்ரச்சனைகள், ஆண்கள் பணியகச்சூழலில் சந்திக்கும் ப்ரச்சனைகள், வாழ்க்கை ப்ரச்சனைகள், சுகமான அனுபவங்கள், மலரும் நினைவுகள் போன்றவை சார்ந்ததாக படைப்பு இருந்தால் ஈரேழு உலகிலும் உள்ள ஆணினம் வாழ்த்திப் போற்றும்.

  3. கண்டிப்பாக ஜாதி, அரசியல் சார்ந்த படைப்புகளை அனுப்பிவைக்க வேண்டாம். ஆனால் ஔவையாரே ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லியிருப்பதால், ஆண்ஜாதி(யைப் போற்றியும்), பெண்ஜாதி(யைத் தூற்றியும்) சம்பந்தப்பட்ட படைப்புகள் விரும்பி வரவேற்கப்படுகின்றன.

  4. சப்பாத்திக்கட்டை சிண்ட்ரோம், இலுப்பக்கரண்டிஃபோபியா இருக்கும் கணவன்மார்கள் 'விபத்து'களிலிருந்து தப்பிக்கும்பொருட்டு புனைப்பெயரிலேயே படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

  5. மகளிருக்கு 0.33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதால் தாய்க்குலங்களும் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

  6. கிளுகிளுப்புக் கதைகளுக்கென தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஆறாவது நிபந்தனையாக இருக்கவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஏனெனில், அது வெறும் அறிவிப்பு மட்டுமே. அதனால், ஆபாசம் தவிர்த்து அறிவுபூர்வமான (?!) விஷயங்கள் இருப்பதில் தவறில்லை.

  7. சமீபத்திலோ வெகுநாட்களுக்கு முன்னரோ கண்ணாலம் கட்டினவுங்கோ.... ச்சே... லோக்கல் பாஷபா...திருமணம் செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏதேனும் சொல்ல நினைத்தால் (தைரியமாக) இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  8. காதலுக்கும் கஷ்டத்துக்கும் மொழி ஒரு தடையில்லை என்பதால், மேல்Kind ஈபுக்குக்கும் மொழி ஒரு தடை இல்லை. ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வசதிப்படும் என்றால் ஆங்கிலத்திலேயே படைப்புகளை எழுதி அனுப்பலாம். விரும்பினால், மொழிபெயர்த்தோ அல்லது அப்படியே ஆங்கிலத்திலேயேவோ பிரசுரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

  9. படைப்புகளை அனுப்பி வைக்க ஃபிப்ரவரி 10ஆம் தேதி வரை நேரமிருக்கிறது ஐயா. எனவே ரோசிச்சி, யோசிச்சி பட்டையை ஓட்டவும் (பின்ன எத்தனை நாளைக்குத்தான் பட்டையைக் கிளப்பறதோடயே நெறுத்திக்கறது?).


ஈ-புக் பற்றி...
  • ஈ-புக்கின் முதல் பிரதியை யாஹு File Transfer உதவியுடன் பிரபலமான ஒரு சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொள்வார்.

  • ஈ-புக்கில் விளம்பரங்கள் செய்ய விரும்புவோர் மேற்கண்ட மின்னஞ்சலையே தொடர்பு கொள்ளலாம். ஈ-புக்கைப் போலவே விளம்பரங்களும் இலவசம். ஆனால் 23,854 விளம்பரங்களுக்கு மட்டுமே இடம் இருப்பதால், உங்கள் விளம்பரத்திற்கு முந்துங்கள்.