நான் 'தண்ணி' போடும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அவளுக்குத் தெரிந்தால் தொலைந்தேன்.
அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்புகிறேன். அவள் சமைத்துக்கொண்டிருக்கிறாள். சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கிறது. மெல்லப் பூனைநடை நடந்து வீட்டிற்குள் நுழைகிறேன். கருப்புநிற அலமாரியைத் திறந்து பாட்டிலை எடுக்கிறேன். சுவற்றில் மாட்டித் தொங்கிக்கொண்டிருக்கும் வீரசிவாஜி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மற்றபடி யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
அந்த அரதப்பழசான கழிநீர்த்தொட்டிக்கு மேலே அடித்திருக்கும் பலகையில் தம்ளர்கள் கவிழ்த்துவைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு தம்ளரை எடுக்கிறேன். அமைதியாக ஒரு பெக். தம்ளரை அலம்பி மீண்டும் பலகைமேல் வைத்துவிட்டு, பாட்டிலை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறேன். வீரசிவாஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார். சமையலறைக்குள் எட்டிப்பார்க்கிறேன். உருளைக்கிழங்குப் பொரியலுக்கு நறுக்கிக்கொண்டிருக்கிறாள். யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
எதாவது பேச்சுக்கொடுக்கவேண்டும். "பக்கத்துவீட்டு சாமிநாதன் சார் பொண்ணுக்கு ஏதாச்சும் வரன் வந்துச்சா?". "பாவங்க, இன்னும் வேளை கூடி வரலை. பாத்துக்கிட்டே இருக்காங்க".
மறுபடியும் வெளியே வருகிறேன். கருப்புநிற அலமாரியிலிருந்து ஏதோ சின்ன சத்தம். ஆனால் நான் பாட்டிலை சத்தமில்லாமல் எடுக்கிறேன். கழிநீர்த் தொட்டியின் மேலே இருக்கும் அந்த அரதப்பழசான பலகையிலிருந்து தம்ளரை எடுக்கிறேன். அமைதியாக ஒரு பெக். பாட்டிலை அலம்பிக் கழிநீர்த்தொட்டியில் வைத்துவிட்டுக் கருப்புநிறத் தம்ளரை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறேன். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
"சாமிநாதன் சார் பொண்ணுக்கு அப்படி என்ன வயசாயிடிச்சு?" "என்ன வெளையாடறீங்களா? ஆடி வந்தா முப்பது. இப்போவே அரைக்கிழம்". அய்யோ, மறந்துபோச்சு! "ஓ..ஓ.."
மறுபடியும் நான் அந்த கருப்புநிற அலமாரியிலிருந்து உருளைக்கிழங்குகளை எடுக்கிறேன். அலமாரிதான் அதற்குள் இடம் மாறியிருக்கிறது. பலகை மேலிருந்து பாட்டிலை எடுத்து, கழிநீர்த்தொட்டியில் அமைதியாக ஒரு பெக். வீரசிவாஜி சத்தம்போட்டு சிரிக்கிறார். பலகையை உருளைக்கிழங்கில் வைத்துவிட்டு வீரசிவாஜியை அலம்பிக் கருப்புநிற அலமாரியில் வைக்கிறேன். அவள் கழிநீர்த்தொட்டியைத் தூக்கி அடுப்பின்மேல் வைக்கிறாள். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
"சாமிநாதன் சாரைக் கிழம்ன்றியா! கொழுப்புடீ உனக்கு!" "எதாவது உளறாம போய் அமைதியா உக்காருங்க".
உருளைக்கிழங்கிலிருந்து பாட்டிலை எடுத்து கருப்புநிற அலமாரிக்குள் போய் அமைதியாக ஒரு பெக். கழிநீர்த்தொட்டியை அலம்பி பலகையின்மேல் வைக்கிறேன். அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள். வீரசிவாஜி இன்னும் சமைத்துக்கொண்டுதான் இருக்கிறார். இதுவரை யாரும் எதையும் பார்க்கவில்லை. நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
"ஓஹோஹோ! கடைசியில சாமிநாதன் சார் போயும்போயும் ஒரு அரைக்கிழத்தைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாரா!". "போய் முகத்துல ஒரு கை தண்ணியைத் தெளிச்சு அலம்பிட்டு வாங்க".
நாம் மறுபடியும் சமையலறைக்குப் போய் அமைதியாகப் பலகையின்மேல் உட்காருகிறேன். அடுப்பு கூட பலகையின்மேல்தான் இருக்கிறது. வெளியறையிலிருந்து பாட்டில்கள் உருளும் சத்தம் கேட்கிறது. நான் எட்டிப்பார்க்கிறேன். அவள் கழிநீர்த்தொட்டியில் அமர்ந்து ஒரு பெக் அடித்துக்கொண்டிருக்கிறாள். இதுவரை எந்த அரைக்கிழமும் எதையும் பார்க்கவில்லை. ஏனென்றால் வீரசிவாஜி எப்போதும் கவனமாக இருப்பார். சாமிநாதன் சார் இன்னும் சமைத்துக்கொண்டு இருக்கிறார். நான் சுவற்றில் தொங்கி அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
(பி.கு: சொந்தமா இப்படியெல்லாம் எழுத மூளை கிடையாது. இணையத்தில் உலவியதைச் சுட்டுத் தமிழில் தந்திருக்கிறேன். மேல்kindஐ எந்தவிதத்திலும் தாக்கும் எண்ணமில்லை. நாங்கள் எவ்வளவு அப்பாவிகள் என்பதை உணர்த்தவே இந்தப்பதிவு :-))))
9 comments:
சா நிரிச்சு நிரிச்சு வலிறு வயிக்குது :))
By: Arun
பார்த்து... அடுப்புமேல உக்காந்துராம ;)
By: Pandi
தூள்! வீரசிவாஜியை நெப்போலியனா மாத்தியிருந்தா பொருத்தமா இருக்கும்.
ஷங்கரு, அண்ணன் ரமணி சொன்னது டாப்பு!!
By: Meenaks
மாத்தி, மாத்திப் போட்டு கலக்கிட்டே ராசா! கொஞ்ச நேரம் தடுமாற வேண்டியிருந்தது!
By: J. Rajni Ramki
தமிழிfயிங் டாப் டக்கரு
கொஞ்சமா தப்பு பண்ணினா நாம கண்டுக்கறதில்ல. 'அலமாரியிலிருந்து உருளைக் கிழங்கை' எடுக்கும்போதுதான், எங்கேயோ தப்பு நடக்குதுன்னு உறைச்சது. அப்புறம் என்ன? பக்கத்துல இருக்கற பொண்ணு என்னை பைத்தியம்னு நினைக்கிற அளவுக்கு சிரிப்போ சிரிப்பு.
By: vidyas
Jsri, அனைவருக்கும் அனுமதி உண்டு. உள்ளே வந்து கலாய்ங்க.
By: Meenaks
nice one. reminds me of some english poem. where can we find the ooriginal?
By: arvind
Post a Comment